Published : 09 Jan 2024 05:36 PM
Last Updated : 09 Jan 2024 05:36 PM
கோவா: ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் சிஇஓ பெண் ஒருவர் கோவாவாவில் தனது நான்கு வயது மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெற்ற மகனை கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்ட பெண்ணின் பெயர் சுசனா சேத். 39 வயதாகும் இவர் பெங்களூருவில் இயங்கிவரும் செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைண்ட்ஃபுல் AI ஆய்வகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO). இவர் கடந்த சனிக்கிழமை (ஜன.6) அன்று வடக்கு கோவாவின் கண்டோலிமில் உள்ள சோல் பன்யன் கிராண்டே என்ற ஹோட்டலுக்கு தனது நான்கு வயது மகனுடன் சென்றுள்ளார். திங்கள்கிழமை சுசனா சேத், பெங்களூரு செல்ல டாக்ஸியை ஒன்றை முன்பதிவு செய்யுமாறு ஹோட்டல் ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
ஹோட்டல் ஊழியர்கள் சுசனா சேத்தை விமானத்தில் பெங்களூரு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். காரணம் அங்கிருந்து சுமார் 600 கி.மீ தூரம் தொலைவில் உள்ள பெங்களூரு செல்ல சாலை வழியாக 12 மணி நேரம் ஆகும். அதுவே, விமானத்தில் 90 நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும் என்பதால் விமான பயணத்தை ஹோட்டல் ஊழியர்கள் பரிந்துரைத்துள்ளனர். சுசனா சேத் ஊழியர்களின் அறிவுறுத்தலை நிராகரித்து டாக்ஸியில் செல்ல விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
டாக்ஸி வந்ததும் தனது அறையில் இருந்து பெரிய பையுடன் தனியாக வந்துள்ளார் சுசனா. ஹோட்டலுக்கு வரும்போது தனது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா, திரும்பி செல்லும்போது தனியாக செல்வதை கவனித்த அங்கிருந்த ஊழியர்கள், அவர் சென்றதும் தங்கியிருந்த அறையை சுத்தம் செய்ய சென்றுள்ளனர். அப்போதும் ரூமில் சிவப்பு நிறக் கறைகளைக் கண்ட ஊழியர்கள், அந்தக் கறை இரத்தம் என்பதை உறுதி செய்தவுடன் சந்தேகம் அடைந்து உடனடியாக கோவா போலீஸுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போலீஸார் ஹோட்டலை அடைந்து, டாக்ஸி டிரைவர் மூலம் சுசனாவை தொடர்பு கொண்டுள்ளனர். சாதாரணமாக பேச்சு கொடுப்பது போல், சுசனாவிடம் அவரின் மகன் குறித்த தகவலை திரட்டியுள்ளனர். ஹோட்டலுக்கு அவருடன் வந்த மகனை காணவில்லை என்பதையும் போலீஸார் டாக்ஸி டிரைவர் மூலம் சுசனாவிடம் கேட்கவைத்துள்ளனர். அதற்கு, தனது நண்பர் ஒருவரின் வீட்டில் மகனை விட்டுவிட்டதாக கூறிய சுசனா, தவறான முகவரி ஒன்றையும் அளித்துள்ளார். உடனடி விசாரணையில் இறங்கிய கோவா போலீஸார் சுசனா கொடுத்தது போலி முகவரி என்பதை உறுதிசெய்துகொண்ட பின், டாக்ஸி டிரைவரை மீண்டும் தொடர்புகொண்டு அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு வண்டியை திரும்பும்படி உத்தரவிட்டுள்ளனர்.
போலீஸார் சொன்னது போல், கர்நாடகாவின் சித்ரதுர்கா நகர் காவல் நிலையத்துக்கு வண்டியை திருப்பிய டாக்ஸி டிரைவர் அங்கிருந்த போலீஸாரிடம் நடந்ததை எடுத்துக் கூறியுள்ளார். அதன்படி, சுசனாவை விசாரித்த போலீஸார், அவர் வைத்திருந்த பெரிய பையை சோதனையிட்ட போது அதிர்ச்சி காத்திருந்தது. சுசனாவின் நான்கு வயது மகன் கொலை செய்யப்பட்ட நிலையில் அந்த பெரிய பையில் அடைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்த போலீஸார் சுசனாவை உடனடியாக கைது செய்தனர். அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், மீண்டும் கோவாவுக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணையில் மகனை கொன்றதை ஒப்புக்கொண்ட சுசனா, அதற்கான காரணமாக கணவரை பிரிய இருப்பதை கூறியுள்ளார்.
ஸ்டார்ட்-அப் நிறுவன சிஇஓ - மைண்ட்ஃபுல் ஏஐ லேப் எனப்படும் AI அல்லது செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான சுசனா சேத், கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பிளாஸ்மா இயற்பியல் மற்றும் வானியற்பியலில் சிறப்புப் படிப்பில் முதுகலை பட்டம் பெற்றவர். ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் பெர்க்மேன் க்ளீன் மையத்தில் ஒரு பணியாளராகவும் இருந்திருக்கிறார். டேட்டா சயின்டிஸ்ட் பணியில் 12 ஆண்டுகள் அனுபவம் கொண்ட சுசனா சேத், கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.
இவர்கள் இருவரும் தற்போது விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளனர். சமீபத்திய நீதிமன்ற தீர்ப்புகள் இருவர் பிரிவதையும் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் சமீப காலமாக மகிழ்ச்சி இல்லாமல் இருந்த சுசனா சேத், இதற்காக தனது மகனை கொலை செய்தாரா என்ற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்த தொடங்கியுள்ளனர். சுசனாவின் கணவர் தற்போது இந்தோனேஷியாவில் இருப்பதால் அவரை உடனடியாக இந்தியாவுக்கு திரும்ப போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.
புத்திசாலி டாக்ஸி டிரைவர்...- ஹோட்டலுக்கு வரும்போது தனது நான்கு வயது மகனுடன் வந்த சுசனா, திரும்பி செல்லும்போது தனியாக சென்றது, ஹோட்டல் அறையில் ரத்த கறை இருந்தது போன்ற காரணங்களால் அவர் மீது சந்தேகம் வலுக்க, நடந்தது என்னவென அறிய விரும்பிய கோவா போலீஸார் அதற்காக சுசனா பயணித்த டாக்ஸி டிரைவரை தொடர்புகொண்டு விவரத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். சுசனா கைது செய்யப்படும் வரை போலீஸாருக்கு உறுதுணையாக இருந்தது டாக்ஸி டிரைவர்தான். போலீஸார் பலமுறை போன் செய்தபோதும் பதற்றமடையால் இருந்து சுசனாவின் நார்மலாக பேசி விஷயங்களை பெற்று அவரை கைது செய்வதற்கு துணையாக இருந்துள்ளார்.
டாக்ஸி டிரைவர் பேசுவதை பார்த்து சுசனா சந்தேகம் அடைந்துவிட கூடாது என்பதற்காக போலீஸார் டிரைவரிடம் கொங்கனி மொழியில் பேசியுள்ளனர். இந்த மொழி சுசனாவுக்கு புரியாததால் அவரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை என்கின்றனர். இறுதியில் டிரைவரை கொண்டே சுசனா சேத்தை அருகில் உள்ள காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லவைத்து கைது செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT