Published : 09 Jan 2024 01:18 PM
Last Updated : 09 Jan 2024 01:18 PM
மாலி: மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சுவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அதற்கேற்ப நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றும் அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் அலி ஆசிம் வலியுறுத்தியுள்ளார்.
இந்தியா உடனான மாலத்தீவின் உறவில் சிக்கல் ஏற்பட்டிருப்பதை அடுத்து, இந்த விவகாரம் குறித்து பேசிய ஜனநாயகக் கட்சி எம்.பி அலி ஆசிம், “அதிபர் முகம்மது முய்சுவை பதவியில் இருந்து நீக்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். நாட்டின் மிகப் பெரிய எதிர்க்கட்சியான எம்.டி.பி., அதிபருக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். மற்றொரு எம்.பி.யான நசீம், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், இதற்காக அவருக்கு சம்மன் அனுப்பப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எதிர்க்கட்சி எம்.பிக்கள் அதிபர் முகம்மது முய்சுக்கு எதிராக கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். பிரதான எதிர்க்கட்சியான எம்.டி.பி-யின் மூத்த தலைவரும் முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான மரியா அகமது திதி, இந்தியா உடனான மாலத்தீவின் உறவு மிகவும் பழமையானது என்றும், அந்த உறவை அந்நியப்படுத்தும் ஆளும் கட்சியின் செயல்பாடு குறுகிய நோக்கம் கொண்டது என்றும் கண்டித்துள்ளார். எங்களைப் பொறுத்தவரை இந்தியா முதல் என்பதுதான் கொள்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எம்.டி.பி.-யின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான அகமது மலூப், "இந்திய சுற்றுலாப் பயணிகள் மாலத்தீவை புறக்கணிக்கும் போக்கு தொடர்ந்தால், அது நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதில் இருந்து மீள்வது கடினமாக இருக்கும். தற்போது ஏற்பட்டுள்ள சூழல் கவலையை ஏற்படுத்தி உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
"மாலத்தீவு சுற்றுலாவையே பெருமளவு நம்பி இருக்கிறது. நாட்டின் அந்நியச் செலாவணிக்கும், வேலைவாய்ப்புக்கும் சுற்றுலாவே பிரதானமாக உள்ளது. கரோனா தொற்றுக்குப் பிறகு மாலத்தீவுக்கு சுற்றுலா வருபவர்களில் இந்தியர்களே அதிகம். இதனை மாலத்தீவு அங்கீகரிக்க வேண்டும்" என்று முன்னாள் சுற்றுலாத் துறை அமைச்சர் அப்துல்லா மாசூம் தெரிவித்துள்ளார். மேலும், இந்தியர்கள் மனம் புண்பட்டிருப்பதற்காக வருந்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT