Published : 09 Jan 2024 06:45 AM
Last Updated : 09 Jan 2024 06:45 AM
திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் முந்தைய தேர்தல்களில் கிடைத்த ஆதரவை கணக்கிட்டு செல்வாக்குள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து வரும் மக்கள வைத் தேர்தலில் வெற்றி பெற பாஜக திட்ட மிட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் பாஜக இதுவரை ஒரு எம்.பி. தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்நிலையில், வரும் மக்களவைத் தேர்தலில் மாநிலம் முழுவதும் கவனம் செலுத்தாமல், குறிப்பிட்ட சில தொகுதிகளை தேர்ந்தெடுத்து அங்கெல்லாம் மட்டும் தீவிர கவனம் செலுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. ஏனெனில், மாநிலம் முழுவதும் பாஜக.வுக்கு கட்சி ரீதியாக சிறந்த கட்டமைப்புகள் இல்லை. இந்நிலையில், சில தொகுதிகளுக்கு மட்டும் குறி வைத்துள்ளது.
அதன்படி முதல்கட்டமாக திருவனந்தபுரம், திருச்சூர், பத்தனம்திட்டா, ஆற்றிங்கல் ஆகிய 4 தொகுதிகளைக் கைப்பற்ற பாஜக வியூகம் வகுத்து வருகிறது. இதன்மூலம் கேரளாவில் பாஜக காலூன்ற முடியாத நிலையை மாற்றி அமைக்கவும் பல்வேறு திட்டங்களை தீட்டி வருகின்றனர்.
முதலாவதாக திருச்சூர் தொகுதியை இந்த முறை கைப்பற்ற பாஜக நினைக்கிறது. கடந்த 2019-ம் ஆண்டு இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி போட்டியிட்டு 28.2 சதவீத வாக்குகள் பெற்றார். இது கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாஜக வேட்பாளர் கே.பி.ஸ்ரீசான் வாங்கிய 11.15 சதவீத வாக்குளை விட இரண்டு மடங்கு அதிகம். ஆளும் இடதுசாரி மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி இந்த முறை திருச்சூர் தொகுதியை கைப்பற்ற பாஜக தலைவர்கள் வியூங்கள் வகுத்து வருகின்றனர். எனவே, இந்த முறையும் நடிகரும் மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான சுரேஷ் கோபியே திருச்சூர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் என்பதையும் தாண்டி சமீபத்தில் பிரதமர் மோடி திருச்சூரில் ‘ரோடு ஷோ’ சென்றதும், கிறிஸ்தவர்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதும் பாஜக.வுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவதாக திருவனந்தபுரம் தொகுதி. இங்கு காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் எம்.பி.யாக இருக்கிறார். இந்த முறையும் தொடர்ந்து 4-வது முறையாக காங்கிரஸ் சார்பில் இவர் போட்டியிடுவார் என்று கூறப்படுகிறது. அதேநேரத்தில் கடந்த 2 தேர்தல்களிலும் பாஜக வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளைப் பெற்று 2-வது இடத்தைப் பிடித்தனர். ஆளும் இடதுசாரி வேட்பாளரை 3-வது இடத்துக்கு பாஜக தள்ளியது.
திருவனந்தபுரம் தொகுதியில் கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக மூத்த தலைவர் ஓ.ராஜகோபால் போட்டியிட்டார். அப்போது 32.32 சதவீத வாக்குகள் பெற்றார். சசி தரூர் 34.09 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். குறைந்த வாக்கு வித்தியாசத்தில்தான் அவர் வெற்றி பெற்றார். கடந்த 2009-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பெற்றதைவிட 2014-ம் ஆண்டு தேர்தலில் 20 சதவீத வாக்குகள் அதிகமாக பெற்றார் ராஜகோபால். கேரளாவின் மற்ற தொகுதிகளை ஒப்பிடும் போது திருவனந்தபுரம் தொகுதியில் ஓ.ராஜகோபால் மிகவும் பிரபலமானவராகவும் செல்வாக்கு உள்ளவராகவும் இருக்கிறார்.
கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் சசி தரூரை எதிர்த்து பாஜக சார்பில் கும்மணம் ராஜசேகர் போட்டியிட்டார். அப்போது 31 சதவீத வாக்குளைப் பெற்றார். எனினும், 41 சதவீத வாக்குகள் பெற்று தரூர் வெற்றி பெற்றார். இந்நிலையில், திருவனந்தபுரம் தொகுதியில் முழுநேர களப்பணியாற்றி கைப்பற்ற பாஜா திட்டமிட்டுள்ளது.
மூன்றாவதாக பத்தனம்திட்டா தொகுதி. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின் போது இந்த தொகுதியை குறி வைத்து பாஜக தேர்தல் பணியாற்றியது. ஏனெனில், சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரத்தில் போராட்டம் நடைபெற்றதை மையமிட்டு இந்த தொகுதியை பாஜக கைப்பற்ற நினைத்தது.
அதற்கேற்ப கேரள பாஜக தலைவர் கே.சுரேந்திரனை பத்தனம்திட்டா தொகுதியில் பாஜக களமிறக்கிறது. இவர் சபரிமலை போராட்டத்தை முன்னின்று நடத்தியவர் என்பதால், தொகுதியில் மக்கள் ஆதரவு கிடைக்கும் என்று பாஜக எதிர்பார்த்தது. எனினும் கே.சுரேந்திரனால் 3-வது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. எனினும், கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற 15.95 சதவீத வாக்குகளை 2019-ம் ஆண்டு தேர்தலில் 28.97 சதவீதமாக உயர்த்திக் காட்டினார்.
நான்காவது திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஆற்றிங்கல் தொகுதி. இந்த தொகுதியில் இடதுசாரிகள் பெரும் செல்வாக்குடன் இருந்தனர். கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இடதுசாரியிடம் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அடூர் பிரகாஷ் ஆற்றிங்கல் தொகுதியை கைப்பற்றினார்.
அப்போது பாஜக சார்பில் ஷோபா சுரேந்திரன் போட்டியிட்டு 24.18 சதவீத வாக்குகளைப் பெற்றார். அதற்கு முந்தைய தேர்தலில் பாஜக 10.6 சதவீத வாக்கு மட்டுமே பாஜக பெற்றிருந்தது. அதில் இருந்து பாஜக வுக்கு வாக்கு சதவீதம் கணிசமாக உயர்ந்தது. பாஜக.வின் செயல்பாடுகளால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுக்கு எதிராக இந்துக்கள் வாக்குகள் மாறின.
வரும் மக்களவைத் தேர்தலிலும் இந்தத் தொகுதியில் அதிக எண்ணிக்கையில் உள்ள ஈழவா இன மக்களின் வாக்குகளைப் பெற பாஜக தீவிரமாக களமிறங்கி உள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலில் இடதுசாரி, காங்கிரஸ், பாஜக ஆகிய 3 கட்சிகளுமே ஈழவா இனத்தைச் சேர்ந்தவர்களையே வேட்பாளர்களாக அறிவித்தது.
கடந்த தேர்தல்களில் கேரளாவில் கணக்கை தொடங்க கல்வியாளர்கள், நடிகர்கள் உட்பட முக்கிய பிரபலங்களை பாஜக களமிறக்கியது. எனினும் ஒரு இடத்தில் கூட அந்தக் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை. இந்த நிலையை வரும் மக்களவை தேர்தலில் மாற்றி காட்ட வேண்டும், சில தொகுதிகளை கைப்பற்றியே ஆக வேண்டும் என்று முனைப்புடன் பாஜக தலைவர்கள் தேர்தல் வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT