Published : 08 Jan 2024 08:34 AM
Last Updated : 08 Jan 2024 08:34 AM
மும்பை: இந்தியாவுடன் தொடர்புடைய பல்வேறு வழக்குகள் குறித்து அமெரிக்காவின் எஃப்பிஐ அதிகாரிகளைச் சந்தித்து கலந்தாலோசனை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமை அமெரிக்கா சென்றனர்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ மாகாணத்தில் இந்திய தூதரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல், மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய தஹவ்வூர் ராணாவை நாடு கடத்துதல் உள்ளிட்டவை குறித்து இந்தச் சந்திப்பில் பேசப்பட உள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்காவின் எஃப்பிஐ இயக்குநர் கிரிஸ்டோபர் வாரே இந்தியாவுக்கு வந்து என்ஐஏ இயக்குநர் தின்கர் குப்தா உட்பட முக்கிய அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். தீவிரவாத அமைப்புகளின் ஊடுருவல், சைபர் குற்றங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து அந்தச் சந்திப்பில் பேசப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்தியா தொடர்புடைய வழக்குகள் குறித்து கலந்தாலோசனை நடத்துவதற்காக என்ஐஏ அதிகாரிகள் எஃப்பிஐ அதிகாரிகளைச் சந்திக்க அமெரிக்கா சென்றுள்ளனர். கடந்த மார்ச் மாதம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் மீது காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குலுக்கும், பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொலைக்கும் ஆயுதங்கள் வழங்கிய அமெரிக்காவைச் சேர்ந்த தர்மன்ஜோத் சிங் கஹ்லோன் மற்றும் மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளி தொழிலதிபர் தஹவ்வூர் ராணா ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சியில் என்ஐஏ இறங்கியுள்ளது. இந்நிலையில், எஃப்பிஐ அதிகாரிகளுடனான சந்திப்பில் இதுகுறித்து கலந்தாலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT