Published : 08 Jan 2024 06:17 AM
Last Updated : 08 Jan 2024 06:17 AM
புதுடெல்லி: பிஹாரில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் மோடி வரும் 13-ம் தேதி அடிக்கல் நாட்டி, பேட்டியா நகரில் உள்ள ராம் மைதானத்தில் உரையாற்றுகிறார். அப்போது முதல் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரம் தொடங்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் மார்ச் மாதம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பிஹார் மாநிலத்தில் சாலைகள், பாலங்கள் உட்பட பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் மோடி வரும் 13-ம்தேதி பிஹார் செல்கிறார். சம்பரான் பகுதியில் பேட்டியா நகரில் உள்ள ராமன் மைதானத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அதுவே மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்கான தொடக்கமாக இருக்கும் எனத் தெரிகிறது.
பிஹாரில் உள்ள 40 மக்களவை தொகுதிகளையும் கைப்பற்ற, பாஜக விரிவான திட்டங்களை வகுத்துள்ளது. பிஹாரில் இம்மாதமும், அடுத்த மாதமும் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பல பொதுக் கூட்டங்களில் பங்கேற்கின்றனர். பிஹாரின் பெகுசாராய், பேட்டியா மற்றும் அவுரங்காபாத்தில் 3 பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி பேசவுள்ளார்.
அதேபோல் பிஹாரின் சீதா மர்ஹி, மாதேபுரா மற்றும் நாலந்தா பகுதியில் மத்திய அமைச்சர் அமித் ஷா உரையாற்றவுள்ளார். பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் சீமாஞ்சல் மற்றும் கிழக்கு பிஹார் பகுதிகளில் பல பொதுக் கூட்டங்களில் பங்கேற்கலாம் என கூறப்படுகிறது.
கடந்த மக்களவை தேர்தலில் தே.ஜ. கூட்டணி 39 இடங்களை கைப்பற்றியது. காங்கிரஸ் ஒரு தொகுதியில் மட்டும் வென்றது. ஆனால் முதல்வர் நிதிஷ் குமார் தே.ஜ கூட்டணி கட்சியில் இருந்து வெளியேறி எதிர்கட்சிகளுடன் இணைந்து மகா கூட்டணியை உருவாக்கி மீண்டும் ஆட்சியை பிடித்தார். வரும் மக்களவை தேர்தலுக்கும் ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கி எதிர்க்கட்சிகளை நிதிஷ் குமார் ஒன்றிணைக்க முயற்சித்து வருகிறார். இதனால் பிஹாரில் வெற்றி பெறுவதில் பாஜக தீவிரமாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT