Published : 03 Aug 2014 10:00 AM
Last Updated : 03 Aug 2014 10:00 AM
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் சனிக்கிழமை செம்மர கடத்தல் கும்பலுக்கும் போலீஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார்.
திருப்பதி சேஷாசலம் வனப் பகுதியில் ஒரு கும்பல் செம்மரங்களை வெட்டி அண்டை மாநிலங்கள் வழியாக சீனா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, துபாய் போன்ற வெளி நாடுகளுக்கு கடத்தப்பட்டு வருகிறது. இந்த கடத்தலை தடுக்கும் முயற்சியில் ஆந்திர அரசு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக ஆயுதம் தாங்கிய போலீஸார் 24 மணி நேரமும் சேஷாசலம் வனப்பகுதியில் தீவிர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஆந்திரா-தமிழகம், ஆந்திரா-கர்நாடகா எல்லைகளில் கூடுதல் முகாம்கள் அமைத்து போலீஸாரும் வனத்துறையினரும் தீவிர வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சேஷாசலம் வனப்பகுதியில் போலீஸாருக்கும் செம்மர கடத்தல் கும்பலுக்கும் இடையே நடந்த மோதலில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்னர் கடப்பா மாவட்டத்தில் ராஜம்பேட்டை பகுதியில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் சனிக்கிழமை சின்ன கொட்டி கல்லி மண்டலத்தில் சேஷாசலம் வனப்பகுதியில் செம்மர கடத்தல்காரர்கள் மரம் வெட்டுவதாக கிடைத்த தகவலின்படி போலீஸார் அங்கு சென்றனர்.
போலீஸாரை கண்டதும், செம்மரக் கடத்தல் கும்பல் அவர்கள் மீது கற்களால் தாக்க தொடங்கியது. அவர்களை சரண் அடையும் படி போலீஸார் கூறியும், தொடர்ந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால், போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் பலியானார். இவரது பெயர், இதர விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை.
ரூ. 50 லட்சம் செம்மரம் பறிமுதல்
திருப்பதியை அடுத்துள்ள சந்திரகிரி மண்டலம் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் சனிக் கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஐதேபல்லி எனும் இடத்தில் வேகமாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை யிட்டதில் ரூ. 50 லட்சம் மதிப் புள்ள செம்மரங்கள் சிக்கியது. தப்பியவர்களை தேடி வருகின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT