Published : 07 Jan 2024 01:21 PM
Last Updated : 07 Jan 2024 01:21 PM
மும்பை: கனரா வங்கியில் ரூ.538 கோடி மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் சனிக்கிழமை கூப்பிய கரங்களுடன் தான் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், தற்போதுள்ள நிலையில் தான் சிறையில் இறப்பதே மேல் என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு செப்.1-ம் தேதி வங்கி மோசடி வழக்கு ஒன்றில் நரேஷ் கோயலை அமலாக்கத் துறை கைது செய்தது. அவர் தற்போது மும்பை ஆர்தர் சாலை சிறையில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ஜி.தேஷ்பாண்டே முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் விசாரணைக்காக சனிக்கிழமை அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கோயல், தனிப்பட்ட முறையில் தன்னிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். நீதிபதி அதற்கு அனுமதி அளித்தார்.
நீதிமன்றத்தின் ‘ரோஸ்னாமா’(தினசரி விசாரணை பதிவு ஆவணங்கள்) படி, நரேஷ் கோயல் கூப்பிய கரங்களுடன் மொத்த உடலும் நடுங்கிய படி தனது உடல் நிலை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். மேலும் தனது மனைவி படுத்தபடுக்கையாக இருப்பதாகவும் அவர்களது ஒரே மகளும் உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாகவும். சிறைத்துறை ஊழியர்கள் தனக்கு உதவுவதில் சில கட்டுப்பாடுகள் இருப்பதாகவும் தெரிவித்தார். தனது முட்டியை சுட்டிக்காட்டிய கோயல், அவற்றில் வீக்கம் இருப்பதாகவும், மடக்க முடியாத அளவுக்கு வலிப்பதாகவும் கூறினார்.
மேலும் அவர், “சிறுநீர் கழிக்கும்போது மிகவும் வலிப்பதாகவும், சில நேரங்களில் அதில் ரத்தம் வருவதாகவும், பல நேரங்களில் தன்னால் உதவியும் பெற முடியவில்லை. நான் மிகவும் பலவீனமடைந்து விட்டதாகவும், தன்னை ஜெ.ஜெ.மருத்துவமனைக்கு பரிந்துரைத்தும் எந்தப் பயனும் இல்லை. ஆர்தர் சிறையில் இருந்து சிறை பாதுகாவலர்கள் மற்றும் சக சிறைக்கைதிகளுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவது மிகவும் சிரமமாக இருக்கிறது. அசவுகரியங்களை தாங்கிக் கொள்ள முடியவில்லை.மருத்துவமனையிலும் நோயாளிகள் மிகவும் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள். என்னால் சரியான நேரத்தில் மருத்துவர்களைப் பார்க்க முடியவில்லை. மருத்துவ சோதனைகளின் போதும் அதனைத் தொடர்ந்தும் என்னால் சிகிச்சை பெற முடியவில்லை. இவை அனைத்தும் எனது உடலை மிகவும் பாதிப்படையச் செய்திருக்கிறது.
எனது மனைவி அனிதா தீவிர புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். எனது மகளும் உடல்நிலை பாதிக்கப்படிருப்பதால், மனைவியை பார்த்துக்கொள்ள முடியவில்லை என்று கண்ணீ்ர மல்கக் கூறினார். தொடர்ந்து தற்போதுள்ள சூழ்நிலையில் நான் நம்பிக்கை இழந்து விட்டேன், உயிர் வாழ்வதை விட சிறையில் இறப்பதே மேல். என்னை ஜெ.ஜெ. மருத்துமனைக்கு அனுப்பாமல் சிறையில் மரணிக்க அனுமதிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நீதிபதி கூறுகையில், “நான் அவரிடம் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டேன். அவரது உடல் நடுங்கிக் கொண்டிருந்தை நான் கவனித்தேன். அவர் நிற்பதற்கு கூட உதவி தேவைப்பட்டது. அவர் கூறியவை அனைத்தையும் நான் கவனத்தில் எடுத்துக்கொண்டுள்ளேன். குற்றம் சாட்டப்பட்டவரை அப்படி எல்லாம் நிராதவராக விட்டுவிட முடியாது. அவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும். அவரது உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு தேவையான அனைத்து விஷயங்களும் மேற்கொள்ளப்படும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவரது உடல்நிலை குறித்து தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அவரது வழக்கறிஞர்களுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நரேஷ் கோயலின் ஜாமீன் மனுவுக்கு அமலாக்கத் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை ஜன.16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா மேலும் சில விமான நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்கள் சிலர் மீது, கனரா வங்கியில் ரூ.538 கோடி பண மோசடி செய்தது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. அந்த வழக்கின் அடிப்படையில் நரேஷ் கோயல் மீது அமலாக்கத்துறை பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடர்ந்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.848.86 கோடி கடனில், ரூ. 538.62 கோடி மோசடி செய்யப்பட்டிருப்பதாக வங்கி அளித்த புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT ( 8 Comments )
What has happened to Nirav Modi and other cricket manipulator Modi who are living lavishly outside India, wheres this old man is languishing in India. ED'S action on pick and choose is watched by people of India. ED, CBI and IT are going to be a liability for Union government for 2024 LS election.
1
0
Reply
மோசடி என்ற வாதையை கொஞ்சம் விளக்கி சொல்லுங்கள். அவ்வளவு கோடி பணம் அவர் திருப்பி தராமல் விட்டுவிட்டாரா ? அப்படியென்றால் அவருடைய சொத்துக்களை விற்று மீட்டு எடுங்கள். இல்ல கொடுக்காமலே கொடுத்தது போல கணக்கு காட்டப்பட்டு என்றால் அதுவும் வாங்கிஊழியர்கள் உதவி இல்லமால் நடக்காதே.
0
0
Reply