Published : 07 Jan 2024 04:46 AM
Last Updated : 07 Jan 2024 04:46 AM
புதுடெல்லி: ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் கடந்த மாதம் முடிந்தது. இதில், பாஜக தனது புதிய உத்தியாக இரண்டு அவைகளின் எம்.பி.க்கள் என மூத்தத் தலைவர்களை போட்டியிட வைத்தது. இதே உத்தியை, வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கு நடைமுறைப்படுத்த காங்கிரஸும் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இதற்காக, மாநிலங்களவை எம்.பி.க்கள், மாநிலங்களில் எம்.எல்.ஏ.க்கள், போட்டியிட்டு தோற்றவர்கள் மற்றும் எதிலும் இன்றி ஒதுங்கியிருப்பவர்களையும் பட்டியல் எடுக்கிறது காங்கிரஸ். இப்பட்டியலில் ராஜஸ்தானின் முன்னாள் முதல்வர் அசோக் கெல்லாட் மற்றும் துணை முதல்வர் சச்சின் பைலட் முக்கியமாக உள்ளனர்.
இம்மாநில தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் சபாநாயகரான சி.பி.ஜோஷியும் இதில் இடம்பெற்றுள்ளார். ம.பி.யில் எம்எல்ஏவாக இருக்கும் கமல்நாத், சத்தீஸ்கர் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் துணை முதல்வர் டி.எஸ்.சிங்தேவ், எம்எல்ஏவான முன்னாள் முதல்வர் பூபேந்தர் பாகல் ஆகியோரும் மக்களவைக்கு போட்டியிடும் வாய்ப்புகள் உள்ளன.
ஆந்திராவில் முன்னாள் மத்திய அமைச்சரான பல்லம் ராஜு, மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவுகான் போன்றவர்களையும் காங்கிரஸ் கணக்கில் கொண்டுள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரான கேரளாவின் ரமேஷ் சென்னிதாலா எம்எல்ஏ மற்றும் பஞ்சாபின் சித்து,அம்மாநில முன்னாள் முதல்வரானசரண்ஜித்சிங் சன்னி ஆகியோரும்மக்களவைக்கு போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
உத்தர பிரதேசத்தில் சல்மான் குர்ஷீத், மற்றும் குஜராத்தில் முன்னாள் எம்பியான பரத்சிங் சோலங்கியும் இப்பட்டியலில் உள்ளனர்.
தமிழகத்தில் முன்னாள் மத்தியஅமைச்சரான சுதர்சன நாச்சியபனும், டெல்லியில் முன்னாள் மத்திய அமைச்சரான அஜய் மக்கன், முன்னாள் எம்பிக்களில் ஜே.பி.அகர்வால் மற்றும் சந்தீப் தீட்ஷித் இடம் பெற்றுள்ளனர்.
டெல்லியின் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித்தின் மகனான சந்தீப்பின் சகோதரியும் இம்முறை போட்டியிட வாய்ப்புள்ளது. இந்த மூத்த தலைவர்களில் எத்தனை பேர் மக்களவை தேர்தலில் போட்டியிட முன்வருவார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், கடந்ததேர்தலில் சில மூத்த தலைவர்கள் போட்டியிட விருப்பமின்றி ஒதுங்கி இருந்தனர். தேர்தல் இல்லாமல் அவர்கள் மாநிலங்களவை எம்.பி.யாக முயற்சித்ததாகக் கருதப்படுகிறது.
வேட்பாளர் பட்டியல்... இவர்களிடம் பேசவும், புதிய வேட்பாளர்களாக இளைஞர்களை தேர்வு செய்யவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இம்மாத இறுதியில் பாஜக போலவே, தம் கட்சியின் வேட்பாளர் பட்டியலை வெளியிடவும் காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. இதற்காக, ஐந்து தேர்வுக் குழுக்களையும், அதன் உறுப்பினர்களையும் காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT