Published : 07 Jan 2024 04:27 AM
Last Updated : 07 Jan 2024 04:27 AM
சென்னை: சூரியனை ஆராய்வற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 புள்ளியை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்ட சுற்றுப்பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பூமியில் இருந்து 15 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சூரியனை ஆய்வு செய்ய 2008 ஜனவரியில் ‘ஆதித்யா–1’ எனும் திட்டத்தை அறிவித்தது. சுமார் 400 கிலோ எடை கொண்ட விண்கலத்தை பூமியில் இருந்து 800 கி.மீ உயரத்தில் நிலைநிறுத்தி சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய இஸ்ரோ முதலில் திட்டமிட்டது. ஆனால், சூரியனின் வெப்பம் மிகுந்த கரோனா மண்டலத்தை பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ தூரத்தில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) பகுதியில் இருந்து பார்க்கும்போது துல்லியமாக ஆய்வு செய்யலாம் என விஞ்ஞானிகள் கருதினர்.
இதையடுத்து இந்த திட்டம் ‘ஆதித்யா எல்–1’ ஆக மாற்றம் அடைந்தது. தொடர்ந்து வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் (IIA), வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம் (IUCAA), இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம் (IISER) ஆகிய மையங்கள் பங்களிப்புடன் ஆதித்யா எல்-1 எனும் அதிநவீன விண்கலத்தை இஸ்ரோ வடிவமைத்தது. இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் செப்.2-ல் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து ஆதித்யாவின் சுற்றுப்பாதை உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, புவிவட்டப் பாதையில் இருந்து விண்கலம் செப்.19-ல் விலக்கப்பட்டது.
அதன்பின்னர் திட்டமிடப்பட்ட எல்-1 புள்ளியை நோக்கி விண்கலம் பயணிக்கத் தொடங்கியது. சுமார் 4 மாதகாலமாக (127 நாட்கள்) சூரியனை நோக்கி சீராக பயணித்துவந்த ஆதித்யா, எல்-1 புள்ளிக்கு அருகே நேற்று முன்தினம் வந்தடைந்தது. தொடர்ந்து திட்டமிட்ட சுற்றுப்பாதையில் விண்கலத்தை உந்திதள்ளும் முயற்சி நேற்று மாலை 4 மணிக்கு மேற்கொள்ளப்பட்டது. அப்போது எல்-1 புள்ளியை மையமாக கொண்ட சூரிய ஒளிவட்டப் பாதைக்குள் (Halo Orbit) ஆதித்யா வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது. பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தபடி இந்த பணிகளை விஞ்ஞானிகள் சிறப்பாக செய்து முடித்தனர்.
இனி எல்-1 புள்ளியைவலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் 5 ஆண்டுகளுக்கு ஆய்வு செய்யும்.
சூரியன் பற்றிய ஆராய்ச்சிக்கு இதுவரை அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு மட்டுமே விண்கலங்களை அனுப்பி யுள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் இடம் பிடித்துள்ளது.
ஆதித்யா எல்-1 சுமார் 1,475 கிலோ எடை கொண்டது. இதில் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை கண்காணிக்க 7 விதமான ஆய்வு சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில் 4 கருவிகள் சூரியனை நேரடியாக கண்காணித்து தகவல்களை வழங்கும். மீதமுள்ள 3 கருவிகள் சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளால் அதன் புறவெளியில் உருவாகும் மாற்றங்கள், எல்-1 பகுதியில் உள்ள துகள்கள் மற்றும் புலங்களை ஆராய்ந்து தரவுகளை வழங்கும். சூரியனில் இருந்து வெளியாகும் காந்தப் புயல் செயற்கைக்கோள்கள், தொலைத் தொடர்பு கட்டமைப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதை தவிர்க்க விண்வெளி வானிலையில் காந்தப் புயல் குறித்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு தேவைப்படும். அதை ஆதித்யா நமக்கு வழங்கும்.
பிரதமர் மோடி வாழ்த்து: இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘‘இந்தியா மற்றொரு புதிய மைல்கல்லை உருவாக்கியுள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 வெற்றிகரமாக அதன் இலக்கை அடைந்தது. நமது விஞ்ஞானிகளின் கடின உழைப்புக்கும், இடைவிடாத அர்ப்பணிப்புக்கும் இது ஒரு சான்றாகும். இந்த அசாதாரண சாதனையை நம்நாட்டு மக்களுடன் இணைந்து நானும் பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புது எல்லைகளை அடைவதற்கு நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்’’ என கூறியுள்ளார்.
லாக்ராஞ்சியன் - 1 புள்ளியில் இருந்து சூரியனை கண்காணிக்கும்: பொதுவாக 2 கோள்களுக்கு இடையேயான ஈர்ப்பு விசை மற்றும் மைய விலக்கு விசை 5 இடங்களில் சமமாக இருக்கும். இதை லாக்ராஞ்சியன் புள்ளி என்று அழைப்பர். சூரியன் மற்றும் புவிக்கு இடையேயும் 5 லாக்ராஞ்சியன் புள்ளிகள் உள்ளன. இங்கு ஒரு விண்கலம் குறைவான எரிபொருளைப் பயன்படுத்தி சமநிலையில் இருக்க முடியும். அதன்படி புவியின் முன்புறத்தில் இருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் உள்ள எல்-1 புள்ளிக்கு அருகேதான் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து கிரகணம் உட்பட அனைத்து சூழல்களிலும் சூரியனை தடையின்றி தொடர்ந்து கண்காணிக்க முடியும்.
இப்புள்ளி கோள்களின் சுழற்சிக்கு ஏற்ப அவ்வப்போது மாறும். இதனால் இந்த இடத்தில் இருந்து இயங்கும் விண்கலமும் தனது நிலையை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டும். மேலும்,சூரியனுக்கும், பூமிக்கும் இடையிலான தொலைவில் நூறில் ஒரு பங்கு தூரத்தில்தான் ஆதித்யா நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2018-ல் நாசா செலுத்திய 'பார்க்கர்' தான் சூரியனுக்கு மிகஅருகே சென்ற விண்கலம். இது 1.4 கோடி கி.மீ தூரத்தில் இருந்து சூரியனை ஆய்வு செய்துவருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT