Published : 06 Jan 2024 04:33 PM
Last Updated : 06 Jan 2024 04:33 PM
பெங்களூரு: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் கர்நாடகாவில் 31 ஆண்டுகளுக்குப் பின்னர் கரசேவகர் ஒருவரை கைது செய்ததை கண்டித்து பாஜகவினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஸ்ரீகாந்த் பூஜாரிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி நடந்த பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தையொட்டி கர்நாடக மாநிலம் ஹுப்ளியில் வன்முறை வெடித்தது. இதில் ஈடுபட்டதாக ஸ்ரீகாந்த் பூஜாரி (56) என்ற கரசேவகரை ஹுப்ளி போலீஸார் கடந்த 2-ம் தேதி கைது செய்தனர். அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட உள்ள நிலையில், 31 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இவரை போலீஸார் கைது செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு மதசார்பற்ற ஜனத தளம் கட்சியின் மாநில தலைவர் குமாரசாமி, ''கர்நாடக அரசின் திடீர் நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. போலீஸாரின் நடவடிக்கையில் உள்நோக்கம் இருக்கிறது. 31 ஆண்டுகளாக போலீஸார் தூங்கி கொண்டிருந்தார்களா? சித்தராமையா போலீஸாரை தவறாக பயன்படுத்துகிறார்'' என விமர்சித்தார்.
இதேபோல கர்நாடக பாஜக சார்பில் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சனிக்கிழமை நடந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் அசோகா பேசுகையில், ''சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு இந்துக்களுக்கு எதிரானது என்பது மீண்டும் உறுதியாகியுள்ளது. 31 ஆண்டுகளாக ஹுப்ளி போலீஸார் சம்பந்தப்பட்டவரை கைது செய்யாதது ஏன்?
பாபர் மசூதி இடிப்பின்போது நானும் எடியூரப்பாவும் கூட அயோத்தியில் பங்கேற்றோம். எங்களை கைது செய்யும் துணிச்சல் போலீஸாருக்கு இருக்கிறதா?'' என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, ஸ்ரீகாந்த் பூஜாரி ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தார்வாட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT