Published : 06 Jan 2024 03:38 PM
Last Updated : 06 Jan 2024 03:38 PM

ஒரே நாடு ஒரே தேர்தல் | ஜன.15 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் - ஆய்வுக்குழு அறிவிப்பு

குறியீட்டுப் படம்

புதுடெல்லி: ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து வரும் 15-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் தலையைிலான ஆய்வுக் குழு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த ஆய்வுக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொதுமக்கள் ஜனவரி 15-ம் தேதிக்குள் தெரிவிக்கும் கருத்துகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். கருத்துகளை ஆய்வுக்குழுவின் இணையதளம் அல்லது இ-மெயில் மூலம் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆராய மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் ஒரு குழு அமைத்தது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான அந்த உயர்மட்டக் குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உள்ளனர்.

இந்தக் குழுவின் கூட்டங்களில் சிறப்பு அழைப்பாளராக மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டது. இக்குழுவின் உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி நியமிக்கப்பட்டார். எனினும், அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பிற சட்டங்களின் கீழ் தற்போதுள்ள கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான பரிந்துரைகளை ஆய்வு செய்து பரிந்துரை செய்வதே இக்குழுவின் நோக்கம். அரசியலமைப்பு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 மற்றும் இவற்றின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் ஆகியவற்றில் தேவைப்படும் திருத்தங்களை ஆய்வு செய்து அது குறித்து இக்குழு பரிந்துரைக்கும்.

இதைக் கருத்தில் கொண்டு இக்குழு இரண்டு ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியது. மேலும், அரசியல் கட்சிகளிடமும் ஆலோசனை கோரியது. 6 தேசிய கட்சிகள், 33 மாநில கட்சிகள், பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத 7 கட்சிகள் ஆகியவற்றுக்கு இக்குழு கடிதம் அனுப்பி இருந்தது. அதில், ஒரே நாளில் எப்போது தேர்தல் நடத்தலாம் என்பது குறித்து கருத்து தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கையாக பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x