Published : 06 Jan 2024 02:25 PM
Last Updated : 06 Jan 2024 02:25 PM

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் லோகோ, முழக்கம் - காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வெளியீடு

புதுடெல்லி: இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையை ராகுல் காந்தி வரும் 14-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், அதற்கான லோகோ மற்றும் முழக்கத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று (ஜன.6) வெளியிட்டார்.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான இந்திய ஒற்றுமை யாத்திரையைத் தொடர்ந்து மணிப்பூர் முதல் மும்பை வரை இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை எனும் பெயரில் இரண்டாம் கட்ட யாத்திரையை ராகுல் காந்தி வரும் 14-ம் தேதி தொடங்க உள்ளார். இதற்கான லோகோ மற்றும் முழக்கம் இன்று வெளியிடப்பட்டது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ், காங்கிரஸ் அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் லோகோ மற்றும் முழக்கத்தை வெளியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மல்லிகார்ஜுன கார்கே, "ராகுல் காந்தி தலைமையில், ஜனவரி 14-ம் தேதி இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை தொடங்குகிறது. நாட்டின் சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் அடிப்படைப் பிரச்னைகள் குறித்து பேசுவதற்காக இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை நடத்தப்படுகிறது. நாட்டில் நிலவும் பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் எழுப்ப முற்பட்ட போது அரசாங்கம் எங்களை பேச அனுமதிக்கவில்லை. 146 எம்.பி.க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது இந்திய வரலாற்றில் இதுவே முதல்முறை.

எனவே, மக்களிடம் இதனைத் தெரிவிக்கவும், சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரையும் சந்தித்து அவர்களின் கருத்துக்களைக் கேட்கவும் மக்களை நோக்கிச் செல்லும் பயணமாக இந்த யாத்திரை இருக்கும். நாட்டு மக்களுக்கு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நீதியை வழங்குவதற்கான ஒரு வலுவான படியாகும். அநீதிக்கு எதிராக நீதியின் முழக்கத்துடன் நாங்கள் மக்களை சந்திக்க உள்ளோம். நீதிக்கான உரிமை கிடைக்கச் செய்வதற்கான பயணம் இது. இந்த முறை நீதி கிடைக்கும். ஒவ்வொரு பலவீனமான மனிதனும் தனக்கான உரிமைகளைப் பெறுவான். சமத்துவ உரிமை, வேலை வாய்ப்புக்கான உரிமை, மரியாதைக்கான உரிமை ஆகியற்றை கிடைக்கச் செய்வதே இந்த யாத்திரையின் நோக்கம்.

சர்வாதிகாரம் மற்றும் ஆணவத்திற்கு தகுந்த பதிலடி கொடுப்பதற்காக, கோடிக்கணக்கான நாட்டு மக்களின் அன்பையும் பிரார்த்தனையையும் எடுத்துக்கொள்வதற்காக இந்த யாத்திரை நடத்தப்படுகிறது. இந்த யாத்திரையின்போது மக்கள் தங்கள் உரிமைகளுக்காக குரலை எழுப்ப வேண்டும் என்றும், இந்த நீதிப் பயணத்தில் எங்களுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் மூலம் பொதுமக்கள் தொடர்பான பிரச்னைகள் பேசப்படும். பணவீக்கம், வேலையில்லாத் திண்டாட்டம், விவசாயிகளின் பிரச்சினைகள், தொழிலாளர்களின் மோசமான நிலை, பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான இடைவெளியை அதிகரிப்பு மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பான பிரச்சினைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். இந்த யாத்திரையின் போது, ​​ராகுல் காந்தி, சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் அமைப்புகளுடன் பேசுவோர்; அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பார். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பத்திரிக்கையாளர்கள், விவசாயிகள், சிறு வணிகர்கள், தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பழங்குடியினர் மற்றும் அறிவுஜீவி வகுப்பினரை இணைக்கவும், பொதுமக்களிடம் காங்கிரஸ் கட்சியின் கருத்துக்களை தெரிவிக்கவும், அவர்களின் கருத்துக்களை கேட்கவுமான பொது தளமாக இந்த யாத்திரை அமையும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x