Published : 06 Jan 2024 01:00 PM
Last Updated : 06 Jan 2024 01:00 PM

இணைந்த ஒரே வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு!

ஹைதராபாத்: ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த ஒரு வாரத்தில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரராக இருந்த அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு அறிவித்தார். இவரது ஐபிஎல் வாழ்க்கையில் 6-வது கோப்பையை வென்ற திருப்தியுடன் ராயுடு ஓய்வு பெற்றார். ஐபிஎல் 2023 தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்பு தனது பயணம் நிறைவு பெறுவதாக ராயுடு பிரியாவிடை கொடுத்தார். சிஎஸ்கே ஐபிஎல் 2023 கோப்பையை வென்று ராயுடுவுக்கு ஒரு அருமையான பிரியாவிடை பரிசை அளித்தது.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடு, வாழ்க்கையில் அடுத்த அத்தியாயமாக அரசியலில் கால்பதிக்க இருப்பதாக சில காலங்களாகவே சொல்லப்பட்டுவந்தது. கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஓய்வுக்குப் பிறகு அரசியலில் ஈடுபடுவது புதிதல்ல. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாப் அரசியலில் முக்கியமான நபர். பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், கவுதம் கம்பீர், முகமது அசாருதீன் என பலரை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

அம்பதி ராயுடுவும் இதே பாதையை பின்பற்றி ஒரு வாரத்துக்கு முன்பு ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் முன்னிலையில் இணைந்தார். இதனையடுத்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் விலகுவதாக அறிவித்துள்ளார் அம்பதி ராயுடு.

இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில், "ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவும், அரசியலில் இருந்து சிறிது காலம் ஒதுங்கவும் முடிவு செய்துள்ளேன் என்பதை அனைவருக்கும் தெரிவிக்கவே இந்த பதிவு. மற்ற நடவடிக்கைகள் உரிய நேரத்தில் தெரிவிக்கப்படும்" என்று அதில் தெரிவித்துள்ளார். அரசியலில் காலடி எடுத்துவைத்த ஒரு வாரத்தில் அம்பதி ராயுடு ஓய்வு அறிவித்திருப்பது திடீர் திருப்பமாக அமைந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x