Published : 06 Jan 2024 12:14 PM
Last Updated : 06 Jan 2024 12:14 PM

மேற்கு வங்கம் | ஊழல் வழக்கில் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகராட்சி தலைவர் கைது

கொல்கத்தா: ரேஷன் விநியோக ஊழல் வழக்கில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் நகராட்சித் தலைவர் சங்கர் ஆதியா சனிக்கிழமை அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) அமலாக்கத் துறை அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடத்தப்பட்ட மறுநாள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு 24 பர்கான்ஸ் மாவட்டத்தில் உள்ள பங்கான் நகராட்சியின் முன்னாள் தலைவரான சங்கர் ஆதியாவுக்குச் சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனைக்கு பின்னர் அமலாக்கத் துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர். அமலாக்கத்துறை அதிகாரிகளின் விசாரணைக்கு சங்கர் ஆதியா ஒத்துழைப்பு வழங்கிய பின்னரும் அமலாக்கத்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர் என்று சங்கரின் மனைவி ஜியோத்னா ஆதியா தெரிவித்தார். இந்த கைது நடவடிக்கையைத் தொடர்ந்து உள்ளூர் மக்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்கத்தில் ரேஷன் விநியோக ஊழல் வழக்குத் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மண்டல அளவிலானத் தலைவர்கள் சங்கர் ஆதியா மற்றும் ஷாஜகான் ஷேக் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டனர். மேற்கு வங்கத்தில் பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட பொதுவிநியோக திட்டத்தில் 30 சதவீதம் ரேஷன்கள் வெளிச்சந்தைக்கு திருப்பி விடப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டிருக்கும் சங்கர் ஆதியா, மேற்கு வங்கத்தின் முன்னாள் உணவுத்துறை அமைச்சரும், தற்போதைய வனத்துறை அமைச்சருமான ஜோதிபிரியோ மாலிக்கின் நெருங்கிய உதவியாளராக அறியப்படுகிறார். கடந்த 2015 முதல் 2020 வரை பங்கான் மாநகராட்சியின் தலைவராக இருந்துள்ளார். தற்போது திரிணமூல் காங்கிரஸின் மாவட்ட ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக உள்ளார்.

ரேஷன் விநியோக ஊழல் வழக்கில் சங்கர் ஆதியா கைது செய்யப்பட்டிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. பங்கானில் அரசி ஆலை வைத்திருக்கும் சங்கர் ஆதியா வெளிநாட்டு பணபரிமாற்ற தொழிலும் செய்து வருகிறார். இதன்மூலம் அவர் பணமோசடியில் ஏதாவது ஈடுபட்டுள்ளாரா என்று அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்று தகவல் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.

அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: முன்னதாக ஊழல் குற்றச்சாட்டு அடிப்படையில் மேற்கு வங்க மாநிலத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று 15 இடங்களில் சோதனை நடத்தினர். அதில் மேற்குவங்க அமைச்சர் ஜோதிபிரியோ மாலிக்கின் நெருங்கிய நண்பர் ஷேக் ஷாஜகான் வீடும் ஒன்று. அங்கு அமலாக்கத் துறை அதிகாரிகள் சென்ற போது, திரிணமூல் கட்சி தொண்டர்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் பாதுகாப்புக்குச் சென்ற மத்திய படையினரையும் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். இதில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காயம் அடைந்தனர். அவர்கள் சேதம் அடைந்த வாகனங்களை விட்டு வெளியேறி ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களை வழிமறித்து தப்பிச் சென்றனர். காயம் அடைந்த அதிகாரிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

ஆளுநர் கண்டனம்: இச்சம்பவத்துக்கு கடும் கண்டனமும், எச்சரிக்கையும் விடுத்துள்ள மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் கூறியிருப்பதாவது: அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியது ஆபத்தான, கொடூரமான சம்பவம். மேற்குவங்க மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, தனியார் நிறுவன கட்டுப்பாட்டில் இயங்கும் அரசுஅல்ல. இது போன்ற காட்டுமிராண்டித்தனத்தை தடுத்து நிறுத்துவது நாகரிகமான அரசின் கடமை. முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு தனது கடமையை செய்ய தவறினால், இந்திய அரசியல் சாசனப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அரசியல் சாசனம் எனக்கு அளித்துள்ள அதிகாரத்தின் படி தகுந்த நடவடிக்கை எடுக்க எனக்கு அதிகாரம் உள்ளது. தேர்தலுக்கு முந்தைய வன்முறை விரைவில் முடிவுக்கு வர வேண்டும். இவ்வாறு ஆளுநர் ஆனந்த போஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x