Published : 06 Jan 2024 05:58 AM
Last Updated : 06 Jan 2024 05:58 AM
புதுடெல்லி: நடப்பாண்டில் (2024-ம் ஆண்டு) மாநிலங்களவையைச் சேர்ந்த 68 எம்.பி.க்கள் ஓய்வு பெறவுள்ளனர். இதில் பாஜகவைச் சேர்ந்த 60 எம்.பி.க்களும் அடங்குவர். மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக்காலம் 6 ஆண்டுகளாகும். இந்நிலையில் இந்த ஆண்டு மாநிலங்களவையிலிருந்து 68 எம்.பி.க்கள் ஓய்வு பெறப் போவ தாக மாநிலங்களவை அலுவலகம் தெரிவித்துள்ளது.
9 அமைச்சர்கள்: இந்தப் பட்டியலில் 9 மத்திய அமைச்சர்கள் உட்பட 60 பாஜக எம்.பி.க்களும் அடங்குவர். மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ், மன்சுக் மாண்டவியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரும் இந்தப் பட்டியலில் அடங்குவர். இவர்களது பதவிக்காலம் வரும் ஏப்ரலில் முடிவடையவுள்ளது. ஏப்ரலில் மட்டும் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது.
உத்தரபிரதேசத்திலிருந்து 10 எம்.பி.க்களும், மகாராஷ்டிரா, பிஹார் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 6 எம்.பி.க்களும், மேற்கு வங்கம், மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 5 எம்.பி.க்களும், கர்நாடகா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 4 எம்.பி.க்களும், ஒடிசா, தெலங்கானா, கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 3 எம்.பி.க்களும், ஜார்க்கண்ட், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா 2 எம்.பி.க்களும், உத்தராகண்ட், இமாச்சல பிரதேசம், ஹரியாணா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா ஒரு எம்.பி.யும் ஓய்வு பெறவுள்ளனர்.
நியமன எம்.பி.க்கள்: மேலும் 4 நியமன எம்.பி.க்களின் பதவிக் காலம் வரும் ஜூலை மாதம் முடிவடைய உள்ளது. பாஜக தலைவரான ஜே.பி. நட்டாவின் பதவிக் காலமும் முடிவடையவுள்ளது. இந்த முறை அவர் தனது சொந்த மாநிலமான இமாச்சல பிரதேசத்தில் போட்டியிட முடியாத நிலை உள்ளது. அவர் வேறு மாநிலத்தில் இருந்து போட்டியிடுவார் எனத் தெரிகிறது.
அதேபோல இம்முறை காங்கிரஸ் கட்சி, மாநிலங்களவைக்கு தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து எம்.பி.,க்களை அனுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT