Published : 06 Jan 2024 06:34 AM
Last Updated : 06 Jan 2024 06:34 AM
புதுடெல்லி: குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கு, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின்போது இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மாநிலங்களவை தலைவர் ஜக்தீப் தன்கர் போன்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி கல்யாண் பானர்ஜி மிமிக்ரி செய்தார். இதை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தனது செல்போனில் படம் பிடித்தார். மாநிலங்களவை தலைவர் போன்று நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற வளாகத்திலேயே மிமிக்ரி செய்தது அவரது மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்திவிட்டது என்று கூறி பாஜகவினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், இந்த விவகாரத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோரும் தங்களது கவலையை வெளிப்படுத்தினர்.
இந்நிலையில் குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி பாராட்டு தெரிவித்தார். இதுகுறித்து கல்யாண் பானர்ஜி நேற்று கூறியதாவது: எனது பிறந்தநாளையொட்டி, குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் வாழ்த்து தெரிவித்தார். நேற்று எனது பிறந்த நாள். எனது பிறந்த நாளுக்கு அவர் எனக்கு வாழ்த்து தெரிவித்தது, குடியரசுத் துணைத் தலைவரின் பெருந்தன்மையைக் காட்டுகிறது.
அவர் என்னிடமும் என் மனைவியிடமும் பேசி வாழ்த்தினார். மேலும் விருந்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார். அவரது செயல் குறித்து நான் உண்மையிலேயே வியப்படைகிறேன். விருந்துக்கு அழைப்பு விடுத்த, குடியரசு துணைத் தலைவருக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT