Published : 06 Jan 2024 06:06 AM
Last Updated : 06 Jan 2024 06:06 AM

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் நம்பகமானது : காங்கிரஸ் குற்றச்சாட்டை நிராகரித்தது தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: இண்டியா கூட்டணி தலைவர்களின் கூட்டம் கடந்த டிசம்பர் 19-ம் தேதி டெல்லியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டது.

இதுதொடர்பாக இண்டியா கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கடந்த டிசம்பர் 30-ம் தேதி தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு கடிதம் அனுப்பினார். அதில், வாக்கு எண்ணிக்கையின் போது விவிபாட் இயந்திரத்தின் ஒப்புகை சீட்டுகள் 2 சதவீதம் மட்டுமே சரிபார்க்கப்படுகிறது. 100 சதவீத ஒப்புகை சீட்டுகளும் சரிபார்க்கப்பட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இதற்கு தலைமைத் தேர்தல் ஆணைய முதன்மை செயலாளர் பிரமோத் குமார் சர்மா தரப்பில் அனுப்பிய 9 பக்க பதில் கடிதத்தில் கூறியிருப்பதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந் திரத்தின் நம்பகத்தன்மை உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புகளின் மூலம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் அனுப்பப்பட்ட கடிதத்துக்கு ஏற்கெனவே பதில் அளிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் ஆணையத்தின் ‘அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' பகுதியில் அனைத்து சந்தேகங்களுக்கும் விரிவான விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதே விவகாரம் தொடர்பாக கடந்த டிசம்பர் 30-ம் தேதி மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இந்த கடிதத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம், விவிபாட் இயந் திரம் தொடர்பாக புதிதாக எந்த புகாரும் கூறப்படவில்லை. அனைத்து சந்தேகங்களுக்கும் தேர் தல் ஆணைய இணையத்தில் (அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்) தெளிவான விளக்கம் அளிக்கப்பட்டு இருக்கிறது என்பதை மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த பகுதி கடந்த 4-ம் தேதி புதுப்பிக்கப்பட்டு உள்ளது. இதில் அனைத்து சந்தேகங்களுக்கும் விரிவான பதில் உள்ளது.

வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை நாட்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடன் இருக்கின்றனர். இதுவரை பல தேர்தல்களில் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த அனுபவத்தின் அடிப்படையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் நம்பகமானவை என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x