Published : 06 Jan 2024 07:58 AM
Last Updated : 06 Jan 2024 07:58 AM

சூரியனின் வெளிப்புறத்தை ஆராய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் இன்று மாலை நிலைநிறுத்தப்படுவதாக இஸ்ரோ தகவல்

சென்னை: சூரியனின் வெளிப்புறப் பகுதியைஆராய்வதற்காக இஸ்ரோ அனுப்பியுள்ள ஆதித்யா விண்கலம், பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ. தொலைவில் உள்ள எல்-1 புள்ளிக்கு மிக அருகே இன்று (ஜன. 6) மாலை நிலைநிறுத்தப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சூரியனை ஆராய்வதற்காக ஆதித்யா எல்-1 என்ற அதிநவீன விண்கலத்தை வடிவமைத்தது. இதில் வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம், வானியல் மற்றும் விண்வெளி இயற்பியல் பல்கலைக்கழக மையம், இந்திய அறிவியல் கல்வி மற்றும்ஆராய்ச்சிக் கழகம் ஆகியவை முக்கியப் பங்காற்றின.

இந்த விண்கலம் பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம் கடந்த செப். 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலத்தை பூமியில் இருந்து 15 லட்சம் கி.மீ.தொலைவில் உள்ள லாக்ராஞ்சியன் பாயின்ட் ஒன் (Lagrangian Point One) எனும் புள்ளிக்கு மிக அருகே நிலைநிறுத்த இஸ்ரோ முடிவு செய்தது.

அதன்படி, 127 நாட்கள் பல்வேறுகட்ட தடைகளைக் கடந்து, சூரியனை நோக்கி சீரான வேகத்தில் பயணித்து வரும் ஆதித்யா விண்கலம், தற்போது எல்-1 புள்ளிக்கு அருகே உள்ளது. தொடர்ந்து எல்-1புள்ளியை மையமாகக் கொண்ட சூரிய ஒளி வட்டப் பாதையில் (Halo Orbit) இன்று மாலை 4 மணியளவில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தப்பட உள்ளது.

பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு ஆய்வு மையத்தில் இருந்தபடியே இதற்கான முயற்சியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணிகள் வெற்றிகரமாக முடிந்த பின்னர், எல்-1 புள்ளியை வலம் வந்தவாறு சூரியனின் கரோனா, போட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் பகுதிகளை விண்கலம் ஆய்வு செய்யும். சூரிய ஆய்வுக்காக இந்தியா அனுப்பும் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 சுமார் 1,475 கிலோ எடை கொண்டது. எரிபொருள் இருப்பைப் பொறுத்து இதன் ஆயுட்காலம் 5 ஆண்டுகள் வரை நீடிக்கும்.

இதில் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆராய 7 வகையானசாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் 4 கருவிகள் சூரியனின் நேர் எதிர் திசையில் நிலைநிறுத்தப்பட்டு, நேரடியாக கண்காணித்து தகவல்களை வழங்கும். மீதமுள்ள கருவிகள் சூரியனில் ஏற்படும் நிகழ்வுகளால், அதன்புறவெளியில் உருவாகும் மாற்றங்களை, எல்-1 பகுதியில் உள்ள துகள்களை ஆராய்ந்து கணிக்கும்.

இதற்கிடையே, விண்கலம் பயணிக்கும்போதே ஆதித்யாவில் உள்ள ஹெல்1ஒஎஸ், ஏபெக்ஸ்,சூட் ஆகிய சாதனங்கள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x