Published : 05 Jan 2024 05:05 AM
Last Updated : 05 Jan 2024 05:05 AM

ஆந்திர அரசியலில் மாற்றம் நிகழுமா? - சொந்த கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தார் ஒய்எஸ்.ஷர்மிளா

ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை கலைத்துவிட்டு, காங்கிரஸில் இணைந்த ஒய்.எஸ் ஷர்மிளாவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுல் காந்தி வரவேற்ற போது.

அமராவதி: சொந்த கட்சியான ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியை கலைத்துவிட்டு அதன் நிறுவனர் ஒய்எஸ்.ஷர்மிளா நேற்று டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இதனால், ஆந்திர அரசியலில் பல மாற்றங்கள் நிகழ வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மறைந்த ஒய்எஸ். ராஜசேகர ரெட்டியின் மகளும், தற்போதைய ஆந்திர மாநிலத்தின் முதல்வராக உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ். ஷர்மிளா, எதிர்பார்த்ததை போலவே நேற்று காங்கிரஸ் கட்சியில் தனது ஆதரவாளர்களுடன் இணைந்துள்ளார்.

அப்போது பேசிய ஷர்மிளா, ‘‘எனது தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி உயிரிழக்கும் வரை காங்கிரஸுக்காகவே உழைத்தார். ராகுல் காந்தியை பிரதமராகப் பார்க்க ஆசைப்பட்டார். அவரது ஆசையை நிறைவேற்றுவதே இப்போது எனது ஆசை. தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் சந்திரசேகர ராவின் அதிருப்தி வாக்குகள் சிதற கூடாது என்பதற்காக தேர்தலில் போட்டியிடாமல் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்தேன்’’ என்றார்.

ஷர்மிளா காங்கிரஸில் இணைந்திருப்பதால், அவருக்கு ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் பதவி அல்லது தேசிய அளவில் ஒரு பதவி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒய்.எஸ்.ராஜசேகரரெட்டி மறைவுக்கு பின்னர், காங்கிரஸை எதிர்த்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கினார்.

இப்போது, அவரது தங்கையே காங்கிரஸில் இணைந்திருப்பதால், ஜெகன்மோகனுக்கு எதிராக ஷர்மிளாவுக்கு ஆந்திராவில் மிகப்பெரிய கட்சிப் பொறுப்பு அளிக்கப்பட்டு, தேர்தலின்போது ஷர்மிளாவை காங்கிரஸ் களமிறக்கும் என்று கூறப்படுகிறது. ஜெகன்மோகனை தோற்கடிக்க, தெலுங்கு தேசம் - ஜனசேனா - கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் கூட்டணி வைக்க ஷர்மிளாவை வைத்து காங்கிரஸ் காய் நகர்த்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x