Published : 05 Jan 2024 07:59 AM
Last Updated : 05 Jan 2024 07:59 AM

பிரதமர் மோடிக்காக பணியாற்றுகிறார் மம்தா பானர்ஜி: ஆதிர் ரஞ்சன் குற்றச்சாட்டு

கொல்கத்தா: எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட 28 கட்சிகள் இடம் பெற்றுள்ளன. வரும் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணி தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகள் அந்தந்த மாநில அளவில் நடைபெற்று வருகின்றன. மேற்குவங்க தொகுதிப் பங்கீட்டில் ஆளும் திரிணமூல் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் இடையே மிகப்பெரிய மோதல் ஏற்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, பகரம்பூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மேற்கு வங்க தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸுக்கு 2 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகிறார். இந்த தொகுதிகள் தற்போது காங்கிரஸ் வசமே உள்ளன. எங்களுக்கு மம்தாவின் ஆதரவு தேவையில்லை. அவருக்குத்தான் எங்களது ஆதரவு தேவை. மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிடும் திறன் காங்கிரஸுக்கு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்காக முதல்வர் மம்தா பானர்ஜி பணியாற்றி வருகிறார். அதனால்தான் அவர் கூட்டணி அரசியலை விரும்பவில்லை. கூட்டணி அரசியலில் ஈடுபட்டால் பிரதமர் நரேந்திர மோடி கோபப்படுவார். அவரை கோபப்படுத்த மம்தா விரும்பமாட்டார். மோடிக்கு விருப்பமான விஷயங்களில் மட்டுமே அவர் ஆர்வம் காட்டுவார்.

மக்களவைத் தேர்தலின்போது பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியை களமிறக்க வேண்டும் என்று திரிணமூல் ஆலோசனை கூறுகிறது. வரும் மக்களவைத் தேர்தலில் எனக்கு எதிராக திரிணமூல் காங்கிரஸ் இருந்து யாரை வேண்டுமானாலும் நிறுத்தட்டும். நான் நிச்சயமாக வெற்றி பெறுவேன். ஒருவேளை நான் தோல்வி அடைந்தால் அரசியலில் இருந்து விலகி விடுவேன்.

மேற்கு வங்கத்தில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக காங்கிரஸ் தலைமை முடிவு எடுக்கும். யாருடைய கருணையின் மூலம் தேர்தலில் போட்டியிட நான் விரும்பவில்லை. முதல்வர் மம்தா பானர்ஜியை நம்ப முடியாது. இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்தார்.

அண்மையில் நடைபெற்ற 5 மாநில தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு விவகாரத்தில் உத்தர பிரதேசத்தின் சமாஜ்வாதி கட்சி, காங்கிரஸ் இடையேமோதல் போக்கு உருவாகி இருக்கிறது.

மகாராஷ்டிரா தொகுதிப் பங்கீட்டில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி, காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. பஞ்சாப், டெல்லி தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையிலான பேச்சுவார்த்தை முழுமையாக தோல்வி அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இண்டியா கூட்டணி பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை முன்னிறுத்த சில கட்சிகள் பரிந்துரை செய்ததால் பிஹார் முதல்வர் நிதிஷ் குமார்கடும் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் மேற்குவங்க தொகுதிப் பங்கீட்டில் திரிணமூல், காங்கிரஸ் இடையிலான மோதல் பகிரங்கமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x