Published : 04 Aug 2014 09:14 AM
Last Updated : 04 Aug 2014 09:14 AM

16 ஆண்டுகள் வளர்த்த இளைஞரை நேபாள பெற்றோரிடம் ஒப்படைத்த மோடி

பிரதமர் நரேந்திர மோடி, 16 ஆண்டுகள் தனது பாரமரிப்பில் வளர்ந்த நேபாள இளைஞரை ஞாயிற்றுக்கிழமை அவரது குடும்பத்துடன் சேர்ந்துவைத்தார்.

26 வயது ஜீத் பகதூர் என்ற அந்த மாணவர், அகமதாபாத்தில் தற்போது பி.பி.ஏ. படித்து வருகிறார். 1998-ல் இவர் நேபாளத்தில் இருந்து தனது அண்ணனுடன் வேலை தேடி இந்தியாவுக்கு வந்தார். ராஜஸ்தானில் இவர்கள் வேலை செய்துகொண்டிருந்தனர். இந்நிலையில் சிறுவன் ஜீத் பகதூர், ஊர் திரும்புவதற்காக கோரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறுவதற்கு பதிலாக, குஜராத் தலைநகர் அகமதாபாத் செல்லும் ரயிலில் தவறுதலாக ஏறிவிட்டான்.

அகமதாபாத்தில் மொழி தெரியாமல் தவித்துக் கொண்டிருந்த ஜீத் பகதூர், அப்போது நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டான்.

அன்று முதல் மோடியின் வீட்டில் அவரது கண்காணிப்பில் வளர்ந்தான் ஜீத் பகதூர். குஜராத் மொழியையும் கற்றுக்கொண்ட பகதூர், கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்துவிளங்கினான். மோடி குஜராத் முதல்வராக ஆன பிறகும் அவரது வீட்டில் வளர்ந்த பகதூர், மோடி பிரதமராகி டெல்லிக்கு வந்துவிட்டதால் அகமதாபாத்தில் விடுதியில் தங்கி பி.பி.ஏ. படித்துவந்தான்.

இதற்கிடையே மோடி, 2 ஆண்டுகளுக்கு முன் குஜராத்தில் தன்னை சந்தித்த நேபாள தொழிலதிபர் வினோத் சவுத்ரியிடம் ஜீத் பகதூரின் குடும்பத்தை கண்டுபிடிக்க உதவும்படி கேட்டுக்கொண்டார்.

அவர் தனது ஊழியர் ஆர்.சி. திட்டால் மூலம் பகதூரின் குடும்பத்தை சில நாள்களிலேயே கண்டுபிடித்தார்.

இந்நிலையில் நேபாள பயணம் மேற்கொண்ட மோடி, ஜீத் பகதூரை தன்னுடன் அழைத்துச் சென்றிருந்தார். முன்னதாக மேற்கு நேபாளம், நவால்பராஸ் மாவட்டத்தில் வசிக்கும் பகதூரின் குடும்பத்தினர் தூதரக அதிகாரிகள் மூலம் காத்மாண்டு வரவழைக்கப்பட்டனர்.

ஞாயிற்றுக்கிழமை தான் தங்கியிருந்த ஹோட்டலில் ஜீத் பகதூரை அவரது குடும்பத் தினரிடம் ஒப்படைத்தார் மோடி.

ஆனந்தக் கண்ணீருடன் பகதூரை ஆரத்தழுவி வரவேற்ற அவரது குடும்பத்தினர் மோடிக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித் தனர்.

மோடியின் வீட்டில் வளர்ந்த அனுபவம் பற்றி பகதூர் கூறும்போது, “8 10 வயதில் அவரிடம் (மோடியிடம்) நான் சென்றதில் இருந்து அவர் என்னை தனது உடன்பிறந்த தம்பியாக கவனித்துக்கொண்டார். எனது தாய் கூட எனக்கு இவ்வளவு செய்திருக்க மாட்டார்” என்றார்.

பிபிஏ இரண்டாம் ஆண்டு படிக்கும் ஜீத் பகதூர், அகமதாபாத்தில் தனது படிப்பை தொடர விரும்புகிறார். குஜராத்தி, ஹிந்தி சரளமாக பேசும் பகதூரால் தனது தாய் மொழியில் பேச முடியவில்லை. ஆனால் அதை புரிந்துகொள்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x