Published : 04 Jan 2024 09:12 AM
Last Updated : 04 Jan 2024 09:12 AM
டெல்லி: டெல்லியில் புதிய மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை 3 முறை சம்மன் அனுப்பிய நிலையிலும் அவர் விசாரணைக்கு ஆஜராகாததால் இன்று (ஜன.4) அவர் கைது செய்யப்படலாம் என்று அக்கட்சியினர் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக புதன் பின்னிரவில் எக்ஸ் சமூகவலைதளத்தில் கருத்திட்ட டெல்லி சட்டம், பொதுப்பணித் துறை அமைச்சர் அதிஷி, "நாளை (வியாழன்) காலை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தலாம் எனத் தகவல்கள் கிடைத்துள்ளது. கைது செய்யப்பட வாய்ப்புள்ளது" என்று குறிப்பிட்டிருந்தார். அதேபோல் டெல்லி சுகாதார அமைச்சர் சவுரவ் பரத்வாஜ் நேற்றிரவு 11.52 மணிக்கு பதிவு செய்த ட்வீட்டில், "நாளை (வியாழன்) காலை முதல்வர் வீட்டில் அமலாக்கத் துறை ரெய்டு நடத்துகிறது. கைது செய்யப்பட வாய்ப்பு" என்று பதிவிட்டுள்ளார். இதுபோல் அக்கட்சிப் பிரமுகர்கள் பலரும் இதே அச்சத்தை வெளிப்படுத்தி சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். இந்நிலையில், முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டின் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சாலைகள் காவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரம் தெரிவிக்கின்றது. மற்றொருபுறம் ஆம் ஆத்மி அலுவலகம் முன் கட்சித் தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். கட்சி முக்கியப் பிரமுகர்களும் அங்கே வரத் தொடங்கியுள்ளனர்.
வழக்கின் பின்னணி: டெல்லி அரசு, மதுபான விற்பனையை தனியாரிடம் வழங்க ஏதுவாக 2021-22 நிதியாண்டுக்கான புதிய மதுக்கொள்கையை கொண்டு வந்தது. இதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டிய துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா, சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார். இதையடுத்து புதிய மதுபான கொள்கையை டெல்லி அரசு கடந்த ஆண்டு (2022) ஆகஸ்ட் மாதம் ரத்து செய்தது. இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றன.
இந்த வழக்கில் அமலாக்கத் துறை 2 குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது. இதுவரை டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரத்து செய்யப்பட்ட மதுபான கொள்கை மூலம் கிடைத்த ரூ.100 கோடி லஞ்சப் பணத்தை, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மிகட்சி கோவாவில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்தியதாக ஒரு குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் முதல்வர் கேஜ்ரிவால் மூன்று சம்மன்களுக்கும் ஆஜராகாததால் அவர் கைது செய்யப்படும் சூழல் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT