Published : 02 Jan 2024 06:48 PM
Last Updated : 02 Jan 2024 06:48 PM
பாட்னா: “ராமர் கோயில் திறப்பு வரை எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தீவிரமான செயல்பாட்டில் இருக்குமாறு அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறையிடம் மத்திய அரசு கேட்டுள்ளதாக நம்பகமான தகவல் கிடைத்துள்ளது” ஆர்ஜேடி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
ராட்டிரீய ஜனதா தளம் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினரான மனோஜ் குமார் ஜா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “மத்திய புலனாய்வு அமைப்புகளில் மனசாட்சி உள்ள சிலர் இன்னும் உள்ளனர். பாஜகவின் அரசியல் கருவியாக மாற நிர்பந்திக்கப்படும் உத்தரவில் மகிழ்ச்சியடையாத அவர்கள் என் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர். ஜன.22-ம் தேதி வரை ஊடகங்களின் கவனம் அயோத்தியை நோக்கி இருக்கும் வரையில், புலனாய்வு அமைப்புகள் கவனம் முழுவதும் எதிர்க்கட்சியினர் மீது இருக்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளாதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்தக் காலக்கட்டத்தில் புலனாய்வு அமைப்புகள் பிஹார், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், டெல்லி, பஞ்சாப், தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தீவிர நடவடிக்கையில் ஈடுபட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக தேஜஸ்வி யாதவ், அபிஷேக் பானர்ஜி, அரவிந்த் கேஜ்ரிவால், பகவத் மான், ஹேமந்த் சோரன் மற்றும் மு.க.ஸ்டாலின் அமைச்சரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோரும் இந்தக் கண்காணிப்பில் அடங்குவர்.
இந்த மாதிரியான கேமாளித்தனங்களுக்கு நாங்கள் அஞ்சவில்லை. தனது அரசியல் எதிரிகளை அப்புறப்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்கும் பாஜக, 2015 பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் படுதோல்வியைச் சந்தித்தது. அதேபோன்ற நிலையை வரும் மக்களவைத் தேர்தலிலும் சந்திக்கும்.
ராமர் கோயிலின் பெயரில் அரசியல் லாபம் பெற முயல்கிறார்கள். அவர்கள் ராமரின் பக்தர்கள் இல்லை. மாறாக நாதுராமின் (காந்தியை கொன்ற கோட்சே) பக்தர்கள். மறுபக்கம் நாங்கள், துப்பாக்கிக் குண்டுகளால் தாக்கப்பட்டு உயிர் பிரியும்போதும் ராமரின் பெயரை உச்சரித்த மகாத்மாவை பின்பற்றுபவர்கள்.
ஜனவரி 22 வரையிலான காலகட்டத்தில், இந்த மூன்று புலனாய்வு அமைப்புகளும் அவர்களின் அரசியல் முதலாளிகளால் வழங்கப்பட்ட கோப்புகளை பிரித்துக்கொண்டு தீவிரமாக வேலை செய்வதை நீங்கள் பார்ப்பீர்கள். ராமர் கோயில் திறப்புக்கு பின்னர் ஒரு சிறிய அமைதி நிலவும். ஏப்ரல் கடைசி வாரத்தில் வழக்கு என்று எதையும் நீங்கள் கேட்க மாட்டீர்கள்" என்று அவர் தெரிவித்தார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்துப் பேசிய மாநில பாஜக தலைவர் அரவிந்த் குமார் சிங், "அமலாக்கத் துறை, சிபிஐ, வருமான வரித் துறை சுதந்திரமான அமைப்புகள். பாஜக ஒருபோதும் அதன் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை. ஆனால், ஊழல்புரிபவர்கள் அவற்றைப் பார்த்து பயப்படுவது இயற்கையே. ஆர்ஜேடி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதன் தலைவர் ஏற்கெனவே பல்வேறு ஊழல் வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT