Published : 02 Jan 2024 05:32 PM
Last Updated : 02 Jan 2024 05:32 PM

வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு விவகாரம்: இண்டியா கூட்டணியின் கருத்தை தெரிவிக்க கால அவகாசம் கோரும் காங்கிரஸ்

புதுடெல்லி: வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டு (விவிபாட்) குறித்த இண்டியா கூட்டணியின் கருத்தைத் தெரிவிக்க கால அவகாசம் கோரி, தலைமைத் தேர்தல் ஆணையருக்கு காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் கடிதம் எழுதியுள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜிவ் குமாருக்கு ஜெயராம் ரமேஷ் எழுதியுள்ள கடிதத்தில், "வாக்காளர்கள் தாங்கள் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் விவிபாட்(VVPAT) தொடர்பாக கடந்த டிசம்பர் 19-ம் தேதி கூடிய இண்டியா கூட்டணி கூட்டத்தில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் இண்டியா கூட்டணியின் தலைவர்கள் சிலர் தங்களையும், பிற தேர்தல் ஆணையர்களையும் நேரில் சந்தித்து தங்கள் கருத்துகளைத் தெரிவிக்க கடந்த டிசம்பர் 20-ம் தேதி தங்களுக்கு கடிதம் எழுதப்பட்டது. தங்களைச் சந்திக்கும்போது அந்தத் தீர்மானத்தின் நகல் தங்களுக்கு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், அதற்கான முயற்சி இதுவரை வெற்றி பெறவில்லை.

எனவே, இண்டியா கூட்டணியின் 3-4 உறுப்பினர்கள் தங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குமாறு மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன். இந்தச் சந்திப்பின்போது, சில நிமிடங்களில் அவர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துவிடுவார்கள். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக இண்டியா கூட்டணிக்கு இருக்கும் கவலைகள் தொடர்பான மனு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அளிக்கப்பட்டதை இந்தத் தருணத்தில் நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இந்த மனு மீதான விளக்கத்தை இந்திய தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி இண்டியா கூட்டணியின் வழக்கறிஞர் மூலமாக அளித்திருந்தது. அதில், பொதுவான விளக்கங்கள் அளிக்கப்பட்டிருந்தன. அவை:

  1. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பாக அடிக்கடி எழுப்பப்படும் பொதுவான கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் உள்ளது. அவற்றைப் பாருங்கள்.
  2. 1951 மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 61 ஏ-ன்படி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் பயன்பாடு சட்டப்பூர்வமானது என தெரிவிக்கப்பட்டிருந்தது.
  3. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான உயர் நீதிமன்ற மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்புகளின் தொகுப்பு அளிக்கப்பட்டிருந்தது.
  4. 2004 முதல் நடைபெற்று வரும் தேர்தல்களில் பலமுறை ஆட்சி மாற்றங்கள் நடந்திருப்பது குறித்த அட்டவணை அளிக்கப்பட்டது. ஆனால், இண்டியா கூட்டணியின் பிரதிநிதிகளை நேரில் சந்திக்க நேரம் வழங்கப்படவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் அதனுடன் இணைக்கப்படும் விவிபாட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் ஒப்புகைச் சீட்டு வழங்கும் இயந்திரத்தின் செயல்பாடு தொடர்பாக இண்டியா கூட்டணி பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகிறது. குறிப்பாக, விவிபாட் மூலம் வழங்கப்படும் ஒப்புகைச் சீட்டுகள் 100 சதவீதம் எண்ணப்பட வேண்டும் என இண்டியா கூட்டணி வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், ஜெயராம் ரமேஷ், இந்திய தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம் எழுதி இருப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x