Published : 02 Jan 2024 04:50 PM
Last Updated : 02 Jan 2024 04:50 PM
கொல்கத்தா: வாராணசி ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில், உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசை விமர்சித்துள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மஹுவா மொய்த்ரா, "இந்த முறை புல்டோசரை இயக்க ஏன் இவ்வளவு தாமதம்?" என்று கேள்வியுடன் சாடியுள்ளார்.
இது குறித்து மஹுவா மொய்த்ரா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், வன்கொடுமை வழக்கில் கைதானவர்கள், முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் நிற்கும் புகைபடங்களைப் பகிர்ந்துள்ளார். அத்துடன், “நவம்பர் 2-ம் தேதி அஜய் பிஷாத் தனது பாஜக ட்ரோல் சேனா அல்லது ஐடி செல் நபர்களுடன் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த முறை உங்களுடைய புல்டோசர்கள் இயங்குவதற்கு ஏன் இவ்வளவு தாமதம்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு யோகி ஆதித்யநாத் முதல்வராக பதவி ஏற்ற பின் அளித்த பேட்டி ஒன்றில், "யாராவது குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் சுட்டுக் கொல்லப்படுவர்" என்று தெரிவித்திருந்தார். மேலும், ஆதித்யநாத்தின் ‘தோக் டூ’ கொள்கையினால் மாநிலத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் குற்றவாளிகள் பலர் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. அதேபோல், குற்றம்சாட்டப்பட்டவர்களின் இடங்களில் புல்டோசர் நடவடிக்கை எடுக்கும் பாணியும் பின்பற்றப்படுகிறது. இந்தப் பின்னணியில் மஹுவா இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக, வாராணசியில் உள்ள ஐஐடி (பிஎச்யு-பனாரஸ் இந்து யுனிவர்சிட்டி) கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் கூட்டுபாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பாஜக ஐடி நிர்வாகிகள் என்று கூறப்படும் மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர். அதுகுறித்த புகார் மனுவின்படி, கடந்த நவம்பர் 1-ம் தேதி இரவு ஐஐடி மாணவி ஒருவர் தனது நண்பர்களுடன் கர்மன் பாபா கோயிலுக்கு சென்றுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அந்த ஐஐடி மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்றுள்ளனர். அந்தப் பெண்ணின் ஆடைகளை களைந்து வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்த அந்த கும்பல், பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, அவர்கள் மீது ஐபிசி 354 பிரிவு மற்றும் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குணால் பாண்டே, ஆனந்த் என்ற அபிஷேக் சவுகான் மற்றும் சக்சம் படேல் ஆகிய 3 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்கள் மூன்று பேரும் பாஜகவின் ஐடி பிரிவு நிர்வாகிகள் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஆளும் பாஜகவினர் ஆதரவின் காரணமாக குற்றம் நடந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகே உத்தரப் பிரதேச போலீஸார் இந்த வழக்கில் நடவடிக்கை எடுத்துள்ளதாக எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. மேலும், வாராணசியில் உள்ள பிரதமர் மோடியின் எம்.பி. தொகுதி அலுவலகத்தை தொண்டர்களுடன் செவ்வாய்க்கிழமை முற்றுகையிட போவதாக அம்மாநில காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் அறிவித்துள்ளார்.
ஏபிவிபி அமைப்பின் ஊடகஒருங்கிணைப்பாளர் அபினவ் மிஸ்ரா கூறுகையில், “இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தண்டனை வழங்கப்பட வேண்டும். மேலும், இரண்டு மாதங்கள் குற்றவாளிகளை பாதுகாத்தவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். ஐஐடி வளாகத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய தகுந்த நடவடிக்கையை பிஎச்யு நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.
Wonder Ajay Bisht aka @myogiadityanath was doing since Nov 2nd when his BJP Troll Sena aka IT cell vaanars gang -raped a woman.
Thok dijiye, Sir. Is Baar Bulldozer Chalaane Mein Itni Der Kyon? pic.twitter.com/R4xvJMG1D5— Mahua Moitra (@MahuaMoitra) January 2, 2024
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT