Published : 02 Jan 2024 03:35 PM
Last Updated : 02 Jan 2024 03:35 PM
பெங்களூரு: 1992-ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அங்கு ராமர் கோயில் அமைக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை கர்நாடக போலீசார் கைது செய்துள்ள நிலையில், அதற்கு அம்மாநில பாஜக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது. அப்போது நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்றன. பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட இருவர் மீது ஹூப்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 31 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட அந்த வழக்கில், இருவரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது குறித்து இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய ஹூப்ளி - தார்வாட் காவல் ஆணையர் ரேணுகா சுகுமார், "பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள். இதுபோன்ற வழக்குகளில் குறிப்பிட்ட கால இடைவெளியில், குற்றவாளிகளைப் பிடிக்க காவல்துறை நடவடிக்கை எடுப்பது வழக்கமானதுதான். 1992-ம் ஆண்டு கலவர வழக்கில் குற்றவாளிகள் தலைமறைவாக இருந்த நிலையில், தற்போது அவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எங்களைப் பொறுத்தவரை இது மற்றுமொரு கலவர வழக்கு. அவ்வளவுதான்" என கூறியுள்ளார்.
இந்த கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவரும், கர்நாடக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான ஆர். அசோகா, "31 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் மீது போடப்பட்ட வழக்கை தற்போதைய கர்நாடக காங்கிரஸ் அரசு தோண்டி எடுத்து பழி வாங்குகிறது. அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் வரும் 22-ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், மக்கள் அனைவரும் அதற்காக ஆவலோடு இருக்கிறார்கள். ராமர் கோயில் கும்பாபிஷேக நாளை தீபாவளியைப் போன்று கொண்டாடுமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ராமர் கோயில் போராட்டத்தில் ஈடுபட்ட இருவரை ஹூப்ளி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இதன்மூலம், ராம பக்தர்களை தீவிரவாதிகளைப் போல சித்தரிக்க காங்கிரஸ் அரசு முயல்கிறது. ராமர் கோயிலுக்காக நடைபெற்ற போராட்டத்தில் நானும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும்கூட பங்கேற்றோம். எங்களைக் கைது செய்ய இந்த அரசுக்கு துணிவு இருக்கிறதா? கர்நாடக அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபட்டால், அதற்கு உரிய விலையை அது கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கிறேன்" என கூறியுள்ளார்.
இந்த கைது குறித்து கருத்து தெரிவித்துள்ள கர்நாடக முதல்வர் சித்தராமையா, "குற்றம் செய்தவர் விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும்? குற்றம் இழைத்தவரை சுதந்திரமாக விட்டுவிட வேண்டுமா? பழைய வழக்குகளை தீர்க்குமாறு அரசு, காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளது. அதன் காரணமாகவே, போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். எங்களுக்கு யார் மீதும் வெறுப்பு இல்லை. நாங்கள் வெறுப்பரசியல் செய்யவில்லை. அப்பாவியை நாங்கள் கைது செய்யவில்லை" என கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT