Published : 02 Jan 2024 01:03 PM
Last Updated : 02 Jan 2024 01:03 PM
புதுடெல்லி: கர்நாடகாவைச் சேர்ந்த ஸ்தபதி அருண் யோகிராஜ் செதுக்கிய ராமர் சிலை, அயோத்தியில் பிரதிஷ்டை செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. மிகப் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வரும் இக்கோயிலில் அன்றைய தினம் குழந்தை ராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. இதற்காக 3 குழந்தை ராமர் சிலைகள் வடிக்கப்பட்டுள்ளன. இதில், ஒன்றை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றுள்ளது. கோயில் கட்டும் பணியை மேற்கொண்டு வரும் ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினர்கள் இந்த வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்ததன் அடிப்படையில், பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள கர்நாடகாவைச் சேர்ந்த மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ராமர் எங்கே இருக்கிறாரோ அனுமனும் அங்கே இருப்பார். அயோத்தியில் ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட உள்ள ராமர் சிலையை தேர்வு செய்யும் பணி முடிந்துவிட்டது. நமது நாட்டின் புகழ்பெற்ற சிற்பி அருண் யோகிராஜ் வடித்த சிலை தேர்வு செய்யப்பட்டுள்ளது. ராமரையும் அனுமனையும் பிரிக்க முடியாது என்பதற்கு இது மற்றுமொரு உதாரணம். அனுமனின் பூமியான கர்நாடகாவில் இருந்து குழந்தை ராமர் சிலை தேர்வானதில் தவறில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வால்மீகி ராமாயண காப்பியத்தில், தான் கோகர்ண என்ற இடத்தில் பிறந்தவன் என அனுமன் சீதையிடம் சொல்கிறார். கோகர்ண என்ற இடம் வட கர்நாடகாவில் ஹம்பிக்கு அருகே துங்கபத்ரா நதிக்கரையில் உள்ளது. இந்த இடமே அனுமன் பிறந்த இடமாகக் கருதப்படுகிறது. இதை கருத்தில் கொண்டு பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். முன்னதாக, முன்னாள் முதல்வர் எடியூரப்பாவும், கர்நாடகாவின் அருண் யோகிராஜ் வடித்த சிலையே தேர்வு செய்யப்பட்டுள்ளது எனக் கூறி இருந்தார். இந்த சிலை 51 அங்குலம் உயரம் கொண்டது.
எந்த அடிப்படையில் சிலை தேர்வு செய்யப்படும் என்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அறக்கட்டளை உறுப்பினர் பிம்லேந்திரா மோகன் பிரதாப் மிஸ்ரா, “நீங்கள் பார்க்கும்போது சிலை உங்களோடு பேசும்; உங்களை மயக்கும்” என கூறி இருந்தார். எனினும், சிலை தேர்வு தொடர்பாக அறக்கட்டளை சார்பில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT