Published : 02 Jan 2024 05:20 AM
Last Updated : 02 Jan 2024 05:20 AM
சென்னை: உத்தர பிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா ஜன.22-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை செய்து வருகிறது. அன்று நண்பகல் 12.45 மணி அளவில் கோயில் கருவறையில் மூலவரான குழந்தை ராமர் சிலை வைக்கப்படுகிறது.
“பகவான் ஸ்ரீராமர் கோயில் கும்பாபிஷேகம், பாரதத்தின் ஒட்டுமொத்த மக்களுக்கும் மற்றுமொரு தீபாவளி பண்டிகையாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அன்று நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் தீபம் ஏற்றிக் கொண்டாட வேண்டும்” என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்குமாறு நாட்டின் முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியின் அறிவுரைப்படி, கும்பாபிஷேக விழாவில், நாடு முழுவதும் உள்ள பக்தர்கள் கலந்து கொள்ள அழைப்பிதழ் வழங்கும் பணியும் நடந்து வருகிறது.
அந்த வகையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்துக்கு அழைப்பிதழ் வழங்கும் பணியை தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் தொடங்கியுள்ளது.
சென்னை கோபாலபுரத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி வீட்டில் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் நேற்று முன்தினம் கும்பாபிஷேக அழைப்பிதழை கொடுத்தனர். அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள் ராமர் கோயில் கும்பாபிஷேக விழா அழைப்பிதழை நேரில் வழங்கினர்.
இந்நிலையில், ஆர்எஸ்எஸ் சென்னை மாநகர தலைவர் சந்திரசேகர், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம் ஆகியோர் குடும்பத்துடன் நேற்று ஆளுநர் மாளிகைக்கு சென்று, கும்பாபிஷேக விழா அழைப்பிதழை ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் வழங்கி, விழாவில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்னை ஈசிஆரில் உள்ள பனையூரில் தனது வீட்டின் அருகே வசிப்பவர்களின் வீடுகளுக்கு சென்று, அழைப்பிதழை வழங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT