Published : 02 Jan 2024 04:44 AM
Last Updated : 02 Jan 2024 04:44 AM
சென்னை: புதிய விமான நிலைய முனையம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று திருச்சி வரும் பிரதமர் மோடி, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இதில், மக்களவை தேர்தல் தொடர்பாக முக்கிய அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார்.
திருச்சியில் ரூ.1,112 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விமான நிலைய புதிய முனையத்தின் திறப்பு விழா, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். அரசு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த பிரதமர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்களவை தேர்தலை சந்திக்க தேசிய அளவில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அதேபோல, பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ கூட்டணியை உருவாக்கி உள்ளன.
ஆனாலும், சமீபத்தில் நடைபெற்ற 5 மாநில தேர்தலின் வெற்றி, பாஜகவினருக்கு மேலும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இதே நம்பிக்கையுடன் மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று 3-வது முறையாக ஆட்சியில் அமர பாஜக வியூகம் வகுத்து வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில், பாஜகவுடன் ஏற்பட்ட உரசல் காரணமாக கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய பிறகு, முதல்முறையாக பிரதமர் மோடி தமிழகம் வருகிறார். இந்த சூழ்நிலையில், வரும் மக்களவை தேர்தலை எப்படி எதிர்கொள்ளலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தி, தமிழகத்தில் பாஜகவின் வெற்றி வியூகத்தை வகுப்பதற்காக பிரதமர் மோடி இன்று தமிழக பாஜகவின் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார்.
திருச்சியில் இன்று நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளை முடித்த பிறகு, மத்திய அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் உட்பட 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதிமுக உடனான கூட்டணி முறிந்த நிலையில், மக்களவை தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, எந்தெந்த தொகுதிகளில் அதிக கவனம் செலுத்தி வெற்றி வாய்ப்பை பெறலாம், யாரை கூட்டணியில் இணைப்பது, கூட்டணியில் இணைபவர்களுக்கு எந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது மட்டுமின்றி, இந்த கூட்டத்தில் சில செயல்திட்டங்கள் குறித்தும் பாஜக நிர்வாகிகளுக்கு மோடி அறிவுறுத்த இருப்பதாகவும் பாஜக வட்டாரத்தில் கூறப்படுகிறது.
அண்ணாமலை ஆலோசனை: இந்த ஆலோசனை கூட்டத்தை முடித்துக் கொண்டு, பிரதமர் மோடி புறப்பட்டுச் சென்ற பிறகு,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது.
இதில் மாநில துணை தலைவர்கள், அணித் தலைவர்கள், மாநில செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கின்றனர். பிரதமர் கூறிய ஆலோசனைகள் குறித்து நிர்வாகிகளுக்கு இந்த கூட்டத்தில் அண்ணாமலை அறிவுறுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், புத்தாண்டின் தொடக்கத்தில் பிரதமர் மோடியின் தமிழக வருகை பாஜகவினரை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT