Published : 02 Jan 2024 05:49 AM
Last Updated : 02 Jan 2024 05:49 AM
பாட்னா: ஒவ்வொரு ஆண்டின் கடைசி நாளில் அனைத்து கேபினட் அமைச்சர்களும் தங்களது சொத்துகள் மற்றும் கடன் விவரங்களை வெளியிடுவதை பிஹார் அரசு கட்டாயமாக்கியுள்ளது.
இதன்படி, பிஹார் அமைச்சரவை செயலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிஹார் முதல்வர் நிதிஷ் குமாருக்கு மொத்தம் ரூ.1.64 கோடி சொத்துகள் உள்ளன. இதில் ரொக்கமாக ரூ.22,552-ம், வெவ்வேறு வங்கிக் கணக்குகளில் ரூ.49,202 டெபாசிட்டுகளும் உள்ளன. மேலும், அவரிடம் ரூ.11.32 லட்சம் மதிப்புள்ள போர்டு எக்கோஸ்போர்ட் காரும், ரூ.1.28 லட்சம் மதிப்புள்ள இரண்டு தங்க மோதிரம், வெள்ளி மோதிரம், ரூ.1.45 லட்சம் மதிப்புள்ள 13 பசுக்கள், 10 கன்றுகள், ட்ரெட்மில் உடற்பயிற்சி சைக்கிள், மைக்ரோவேவ் ஓவன் போன்ற அசையும் சொத்துகள் உள்ளன.
புதுடெல்லி துவாரகாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு நிதிஷ் குமாரிடம் உள்ள ஒரே அசையா சொத்தாக உள்ளது. அதன் தற்போதைய மதிப்பு ரூ.1.48கோடி. கடந்த ஆண்டு நிதிஷ் குமாரின் சொத்து மதிப்பு ரூ.75.53 லட்சமாக மட்டுமே இருந்தது.
ஆனால், டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மதிப்பு உயர்ந்ததையடுத்து அவரின் சொத்து மதிப்பு தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் 2022-23 நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ.4.74 லட்சம் என அறிவித்துள்ளார்.
அதேநேரம், மாநில அமைச்சராக உள்ள அவரது மூத்த சகோதரர் தேஜ் பிரதாப்பின் சொத்து மதிப்பு ரூ.3.58 கோடி என்பது கவனிக்கத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT