Published : 31 Dec 2023 07:21 PM
Last Updated : 31 Dec 2023 07:21 PM
சென்னை: ஜனவரி 2ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி, ரூ. 19,850 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கவும், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.
2024 ஜனவரி 2-ம் தேதி காலை 10.30 மணிக்கு திருச்சி வரும் பிரதமர் நரேந்திர மோடி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38-வது பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். பல்கலைக்கழகத்தின் சிறந்த மாணவர்களுக்குப் விருதுகளை வழங்கி, பிரதமர் சிறப்புரை ஆற்ற உள்ளார். இதையடுத்து, திருச்சியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடத்தைப் பிரதமர் திறந்து வைக்கிறார். ரூ.1100 கோடிக்கும் அதிகமான செலவில் உருவாக்கப்பட்ட இந்த இரண்டு நிலை புதிய சர்வதேச முனையக் கட்டிடம் ஆண்டுதோறும் 44 லட்சத்துக்கும் அதிகமான பயணிகளைக் கையாளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில் சுமார் 3500 பயணிகளைக் கையாளும் திறனை இது கொண்டுள்ளது. புதிய முனையத்தில் பயணிகள் வசதிக்காக அதிநவீன வசதிகள் மற்றும் அம்சங்கள் உள்ளன.
இந்த நிகழ்ச்சியின்போது பல்வேறு ரயில்வே திட்டங்களையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சேலம் - மேக்னசைட் சந்திப்பு - ஓமலூர் - மேட்டூர் அணைப் பிரிவில், 41.4 கிலோ மீட்டரை இரட்டை ரயில்பாதைத் திட்டம், மதுரை - தூத்துக்குடி இடையே 160 கிலோ மீட்டர் துாரத்திற்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் திட்டம், திருச்சிராப்பள்ளி - மானாமதுரை - விருதுநகர் ரயில் பாதை மின்மயமாக்கல், விருதுநகர் - தென்காசி சந்திப்பு மின்மயமாக்கல், செங்கோட்டை - தென்காசி சந்திப்பு - திருநெல்வேலி – திருச்செந்தூர் ரயில்பாதை மின்மயமாக்கல் ஆகிய மூன்று திட்டங்களும் இதில் அடங்கும். சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்துத் திறனை மேம்படுத்தவும், தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் இந்த ரயில் திட்டங்கள் உதவும்.
இந்த நிகழ்ச்சியின்போது ஐந்து சாலைத் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். தேசிய நெடுஞ்சாலை 81-ன் திருச்சி - கல்லகம் பிரிவில் 39 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 81-ன் கல்லகம் - மீன்சுருட்டி பிரிவின் 60 கிலோ மீட்டர் நீளத்திற்கு 4/2 வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 785-ன் செட்டிகுளம் - நத்தம் பிரிவின் 29 கிலோ மீட்டர் நான்கு வழிச்சாலை, தேசிய நெடுஞ்சாலை 536-ன் காரைக்குடி - ராமநாதபுரம் பிரிவில் 80 கிலோ மீட்டர் இருவழிச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 179ஏ சேலம் - திருப்பத்தூர் - வாணியம்பாடி சாலையின் 44 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை ஆகியவை இதில் அடங்கும். மக்களின் பாதுகாப்பான மற்றும் விரைவான பயணத்திற்கும், திருச்சி, ஸ்ரீரங்கம், சிதம்பரம், ராமேஸ்வரம், தனுஷ்கோடி, உத்திரகோசமங்கை, தேவிப்பட்டினம், ஏர்வாடி, மதுரை போன்ற தொழில் மற்றும் வணிக மையங்களின் இணைப்பை மேம்படுத்துவதற்கும் இந்த சாலைத் திட்டங்கள் உதவும்.
இந்நிகழ்ச்சியின் போது, முக்கியமான சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தேசிய நெடுஞ்சாலை 332ஏ-வில் முகையூர் முதல் மரக்காணம் வரை 31 கிலோ மீட்டர் நீளத்திற்கு நான்கு வழிச்சாலை அமைப்பது இதில் அடங்கும். இந்த சாலை தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் உள்ள துறைமுகங்களை இணைக்கும். உலகப் பாரம்பரிய தளமான மாமல்லபுரத்திற்கு இத்திட்டம் சாலை இணைப்பை மேம்படுத்தும். அத்துடன் கல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கு சிறந்த போக்குவரத்து இணைப்பை இது வழங்கும்.
காமராஜர் துறைமுகத்தின் பொது சரக்குக் கப்பல் தங்குமிடம்-2-ஐ (ஆட்டோமொபைல் ஏற்றுமதி/ இறக்குமதி முனையம்-2 மற்றும் துறைமுகம் அமைக்கத் தூர்வாரும் கட்டம்-5) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சரக்குக் கப்பல் தங்குமிடம்-2 திறப்பது நாட்டின் வர்த்தகத்தை வலுப்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கையாகும். இது பொருளாதார வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை அதிகரிக்க உதவும்.
இந்த நிகழ்ச்சியின் போது, ரூ.9000 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், முக்கியமான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (ஐ.ஓ.சி.எல்) ஐபி 101 (செங்கல்பட்டு) முதல் எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி வரை 488 கிலோ மீட்டர் நீளமுள்ள இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்டின் (எச்பிசிஎல்) 697 கிலோ மீட்டர் நீளமுள்ள விஜயவாடா-தருமபுரி மல்டிபிராக்ட் (பிஓஎல்) பெட்ரோலிய குழாய் (வி.டி.பி.எல்) திட்டம் ஆகியவை நாட்டுக்கு அர்ப்பணிக்கப்படும் இரண்டு திட்டங்களில் அடங்கும்.
மேலும், இந்திய எரிவாயு ஆணையத்தால் (கெயில்) கொச்சி-கூத்தநாடு-பெங்களூர்-மங்களூர் எரிவாயுக் குழாய் 2 (கே.கே.பி.எம்.பி.எல் 2) திட்டத்தின் கீழ் கிருஷ்ணகிரி முதல் கோயம்புத்தூர் வரை 323 கிலோ மீட்டர் இயற்கை எரிவாயுக் குழாய் அமைக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது. அத்துடன் சென்னை வல்லூரில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள தரைவழி முனையத்திற்கான பொது வழித்தடத்தில் மல்டிபிராக்ட் குழாய்கள் அமைத்தல் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறையின் இந்தத் திட்டங்கள் இந்தப் பிராந்தியத்தில் எரிசக்தி தொழில்துறையில் வீட்டு மற்றும் வணிக தேவைகளை பூர்த்தி செய்வதற்கான ஒரு நடவடிக்கையாகும். இவை இப்பகுதியில் வேலைவாய்ப்பை அதிக அளவில் உருவாக்கவும் வழிவகுக்கும்.
கல்பாக்கத்தில் உள்ள இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் (ஐ.ஜி.சி.ஏ.ஆர்) விரைவு எரிபொருள் மறுசுழற்சி உலையையும் (டி.எஃப்.ஆர்.பி) பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ரூ.400 கோடி செலவில் உருவாக்கப்பட்ட டி.எஃப்.ஆர்.பி ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது உலகிலேயே ஒரே வகையான மற்றும் வேகமான உலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கார்பைடு மற்றும் ஆக்சைடு எரிபொருட்களை மறுசுழற்சி செய்யும் திறன் கொண்டது. இது முற்றிலும் இந்திய விஞ்ஞானிகளால் வடிவமைக்கப்பட்டுள்ளது. அத்துடன் பெரிய வணிக அளவிலான விரைவான அணு உலை எரிபொருள் மறுசுழற்சி ஆலைகளை உருவாக்குவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையாக இது அமையும். திருச்சிராப்பள்ளியில் உள்ள தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (என்ஐடி) 500 படுக்கைகள் கொண்ட மாணவர் விடுதியையும் பிரதமர் திறந்து வைக்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT