Published : 30 Dec 2023 05:08 PM
Last Updated : 30 Dec 2023 05:08 PM

“அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேம் அன்று வீடுகளில் விளக்கேற்றுங்கள்” - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

அயோத்தியில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ஜனவரி 22-ம் தேதி, நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் ராம ஜோதியை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அயோத்தியில் புதுப்பிக்கப்பட்ட ரயில் நிலையத்தையும், புதிதாக கட்டப்பட்ட மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைத்த பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதையடுத்து அவர் பேசியது: "அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள ஜனவரி 22-க்காக ஒட்டுமொத்த உலகமும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கிறது. டிசம்பர் 30, இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்பு மிக்க நாள். 1943-ம் ஆண்டு இதே நாளில்தான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், அந்தமானில் தேசியக் கொடியை ஏற்றி நாடு சுதந்திரம் அடைந்ததாக பிரகடனப்படுத்தினார்.

இன்று ரூ.15 ஆயிரம் கோடிக்கும் அதிகமான வளர்ச்சித் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள் மூலம் நவீன அயோத்தி நாட்டின் வரைபடத்தில் பெருமை மிகு அடையாளமாக மாறும். நாடு தனது புண்ணிய தளங்களை அழகுபடுத்துகிறது; அதோடு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துகிறது.

உலகில் எந்த நாடாக இருந்தாலும், வளர்ச்சியின் புதிய உச்சத்தை எட்ட வேண்டும் என்றால், அது தனது பாரம்பரியத்தை பத்திரமாக கவனித்துக் கொள்ள வேண்டும். அயோத்தியில் குழந்தை ராமர் ஒரு சிறிய குடிசையில் இருந்தார். அவருக்கு தற்போது அழகிய வீடு கொடுக்கப்பட்டுள்ளது. ராமருக்கு மட்டுமல்ல, நாட்டில் உள்ள 4 கோடி ஏழைகளும் நல்ல வீட்டினைப் பெற்றுள்ளனர்.

அயோத்தியில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சித் திட்டங்கள் இப்பகுதியில் வேலைவாய்ப்பை பெருக்கும். வந்தே பாரத், நமோ பாரத் ரயில்கள் வரிசையில் தற்போது அம்ரித் பாரத் ரயிலும் இடம் பெற்றுள்ளது. இந்திய ரயில்வேயின் வளர்ச்சிக்கு இந்த மூன்று ரயில்களின் சக்தி உதவும்.

ராமருக்கு மிகப் பெரிய கோயில் கட்டி முடிக்கப்பட்ட பிறகு மிகப் பெரிய எண்ணிக்கையில் பக்தர்கள் அயோத்திக்கு வருவார்கள். இதை கருத்தில் கொண்டே ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள வளர்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்மூலம், அயோத்தி ஸ்மார்ட் நகரமாக உருமாறும்.

புதுப்பிக்கப்பட்ட அயோத்தி ரயில் நிலையத்தையும், மகரிஷி வால்மீகி சர்வதேச விமான நிலையத்தையும் திறந்து வைத்ததில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். ராமாயணத்தின் மூலம் ராமரின் பணிகளை நமக்கு தெரியப்படுத்தியவர் வால்மீகி. நவீன இந்தியாவில், வால்மீகி சர்வதேச விமான நிலையம், மக்களை அயோத்தியோடு இணைக்கும். தற்போது கட்டி முடிக்கப்பட்டுள்ள அயோத்தி ரயில் நிலையம் நாள் ஒன்றுக்கு 10-15 ஆயிரம் மக்களை கையாளும் திறன் கொண்டது. ரயில் நிலைய விரிவாக்கப் பணிகள் முழுமையாக முடிவடையும்போது இதன் திறன் 60 ஆயிரம் ஆக மாறும்.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நமது காலத்தில் நடைபெற இருப்பது நமக்கெல்லாம் மிகப் பெரிய பாக்கியம். இந்தத் தருணத்தில், புதிய உற்சாகத்துடன் நாம் புதிய உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். இதற்காக, நாட்டின் 140 கோடி மக்களும் ஜனவரி 22-ம் தேதி தங்கள் வீடுகளில் ராம ஜோதியை ஏற்ற வேண்டும். அன்றைய தினத்தை தீபாவளியைப் போல கொண்டாட வேண்டும்.

ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற விருப்பம் நாட்டு மக்கள் ஒவ்வொருவருக்கும் இருக்கும். ஆனால், அன்றைய தினம் எல்லோரும் இங்கே கூடுவது சாத்தியமற்றது. எனவே, ஜனவரி 22-ம் தேதி கும்பாபிஷேக விழா நடந்து முடிந்த பிறகு ராம பக்தர்கள் தங்களுக்கு ஏற்ற ஒரு நாளில் அயோத்திக்கு வருகை தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்" என்று பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x