Published : 30 Dec 2023 05:38 AM
Last Updated : 30 Dec 2023 05:38 AM

கடலில் மூழ்கிய துவாரகா நகரை நீர்மூழ்கியில் பார்வையிட ஏற்பாடு: குஜராத் அரசு தகவல்

துவாரகா நகரை பார்வையிடு வதற்காக தயாரிக்கப்படும் நீர்மூழ்கியின் மாதிரி.

காந்திநகர்: மகாபாரத காலத்தில் பகவான் கிருஷ்ணர், துவாரகா நகரை தலைமையிடமாக கொண்டு ஆட்சி செய்தார். அவர் துவாரகாவில் இருந்து வெளியேறியதும் அந்த நகரம் கடலில் மூழ்கியதாக மகாபாரதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

தற்போது குஜராத்தின் சவுராஷ்டிரா பிராந்தியம் அரபிக் கடல் பகுதியில் துவாரகா நகர் அமைந்துள்ளது. அங்குள்ள துவாரகாதீஷ் கோயில், திருமாலின் 108 திவ்யதேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. அரபிக் கடலில் மூழ்கிய துவாரகா நகரம் குறித்து 1930-ம் ஆண்டில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பின்னர் 1960-ம் ஆண்டுக்குப் பிறகு துவாரகா நகரம் குறித்து தொடர்ந்து அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது 500-க்கும் மேற்பட்ட தொன்மையான பொருட்கள் கிடைத்தன.

கடந்த 2007-ம் ஆண்டில் இந்திய தொல்லியல் துறை கடலுக்கு அடியில் துவாரகா நகரம் குறித்து ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வை தலைமையேற்று நடத்திய அலோக் திரிபாதி எழுதிய நூலில் கூறும்போது, கடலுக்கு அடியில் கற்களால் கட்டப்பட்ட கட்டிடங்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. மிகப்பெரிய துறைமுகமாக துவாரகா இருந்தது என்பதை நிரூபிக்கும் வகையில் கல் நங்கூரங்கள் கிடைத்தன. பிரம்மாண்ட சுவர், வட்ட வடிவிலான கல் அமைப்பு, வெண்கலம், செம்பு, இரும்பு, மண்பாண்ட பொருட்கள் உள்ளிட்டவை கண்டுபிடிக்கப்பட்டன என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பொருட்களை கார்பன் டேட்டிங் முறையில் ஆய்வு செய்த போது சுமார் 7,500 ஆண்டுகள் முதல் 9,000 ஆண்டுகள் வரை பழமையானதாக இருக்கக்கூடும் என்று பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கணித்துள்ளது. இந்த சூழலில் துவாரகா நகரை நீர்மூழ்கியில் சென்று பார்வையிடும் ஆன்மிக சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த குஜராத் அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து குஜராத் சுற்றுலா துறை முதன்மை செயலாளர் ஹரித் சுக்லா கூறியதாவது:

அரபிக் கடலில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரை பார்வையிட சிறப்பு நீர்மூழ்கியை தயாரிக்க மும்பையை சேர்ந்த மசகான் கப்பல் கட்டுமான நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளோம்.

இந்த நீர்மூழ்கி குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும். ஒரு நேரத்தில் 30 பேர் நீர்மூழ்கியில் பயணம் செய்யலாம். இதில் 24 சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர். அவர்களுடன் 2 மாலுமிகள், 2 நீச்சல் வீரர்கள், ஒரு வழிகாட்டி, ஒருதொழில்நுட்ப நிபுணர் பயணம் செய்வார்கள்.

அவசர கால தேவைக்கான மருந்துகள், ஆக்சிஜன் முகக்கவசம், ஸ்கூபா உடைகள் உள்ளிட்ட உயிர் காக்கும் கவசங்கள் நீர்மூழ்கியில் இருக்கும். கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பில் இருக்க அதிநவீன தொலைத்தொடர்பு வசதிகள் அமைக்கப்படும்.

கடலுக்கு அடியில் 300 அடி ஆழத்தில் நீர்மூழ்கி பயணம் செய்யும். சுற்றுலா பயணிகள் துவாரகா நகரின் அழகை ரசிக்க நீர்மூழ்கியில் கண்ணாடி ஜன்னல்கள் அமைக்கப்பட்டிருக்கும். துவாரகா நகரம் மட்டுமன்றி கடல்வாழ் உயிரினங்களையும் கண்டு ரசிக்க முடியும். வரும் கிருஷ்ண ஜெயந்தி அல்லது தீபாவளி பண்டிகையின்போது நீர்மூழ்கி ஆன்மிக சுற்றுலா திட்டம் தொடங்கப்படும். இவ்வாறு ஹரித் சுக்லா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x