Published : 29 Dec 2023 04:52 PM
Last Updated : 29 Dec 2023 04:52 PM

“மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸால் மட்டுமே பாஜகவுக்கு பாடம் புகட்ட முடியும்” - மம்தா பானர்ஜி

மம்தா பானர்ஜி

கொல்கத்தா: இண்டியா கூட்டணியில் இன்னும் தொகுதிப் பங்கீடுகள் குறித்து முடிவு செய்யப்படாத நிலையில், ‘மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே, பாஜகவுக்கு தக்க பாடம் புகட்ட முடியும். நாங்கள் போராடி பாஜகவை தோற்கடிப்போம்’ என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பாஜகவை வெல்ல 25-க்கும் மேற்பட்ட கூட்டணிக் கட்சிகள் ஒன்றிணைந்து இண்டியா என்ற கூட்டணியை உருவாக்கியிருக்கிறார்கள். மம்தா உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்கள் இண்டியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கேவை முன்னிறுத்தியிருக்கிறார்கள். ஆனால், இன்னும் தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் முடிவு செய்யப்படவில்லை.

இருப்பினும், அதிலும் சில குழப்பங்களும் நிகழ்கிறது. 2024 ஜனவரி முதல் வாரத்தில் இருந்து இண்டியா கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த முறையான பேச்சுவார்த்தையை காங்கிரஸ் தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று பேசிய மம்தா, “மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் பாஜகவுடன் கூட்டு வைத்துக் கொண்டு எங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்கின்றனர். வரும் மக்களவைத் தேர்தலில், மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு எதிரான போரில் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை வகிக்கும். அதேநேரம் நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணி பாஜகவை எதிர்கொள்ளும்” என தனது கூட்டணி கட்சியினரையே கடுமையாக விமர்சித்தார்.

2024 மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே உள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மம்தா பானர்ஜி, “இண்டியா கூட்டணி நாடு முழுவதும் போட்டியிடும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியால் மட்டுமே பாஜகவுக்கு தக்க பாடம் புகட்ட முடியும். மற்ற எந்த கட்சியாலும் அது முடியாது. நாங்கள் போராடி பாஜகவை தோற்கடிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, மேற்கு வங்கத்துக்கு வந்திருந்த அமித் ஷா, "குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) விவகாரத்தில் அதனை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த விடமாட்டோம் என்று மம்தா மக்களை தவறாக வழி நடந்துகிறார். இந்தச் சட்டம் அமலாக்கப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்பதே உண்மை' என்று கூறியிருந்தார். அமித் ஷா அடிக்கடி சிஏஏ குறித்து பேசி மம்தாவை சீண்டி வருவது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x