Published : 29 Dec 2023 08:45 AM
Last Updated : 29 Dec 2023 08:45 AM

மக்களின் முன்னேற்றமே காங்கிரஸ் குறிக்கோள்: 139-வது நிறுவன நாளில் மல்லிகார்ஜுன கார்கே தகவல்

புதுடெல்லி: மக்களின் நலனும் அவர்களின் முன்னேற்றமுமே காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள் என்று அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் 139-வதுநிறுவன நாள் நேற்று அக்கட்சி சார்பில் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ளகாங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர்கள் பிரியங்கா வதேரா, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

நிறுவன தினத்தையொட்டி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் நலன் மற்றும் மக்களின் முன்னேற்றமே காங்கிரஸ் கட்சியின் குறிக்கோள் ஆகும்.நாடாளுமன்ற ஜனநாயகம் அடிப்படையிலான இந்தியா மீது காங்கிரஸ் நம்பிக்கை கொண்டுள்ளது” என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தனது பதிவில், “உண்மை மற்றும் அகிம்சையை அடித்தளமாகவும், அன்பு, சகோதரத்துவம், மரியாதை மற்றும் சமத்துவத்தை தூண்களாகவும், தேசபக்தியை கூரையாகவும் கொண்ட காங்கிரஸ் போன்ற அமைப்பில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

பிரச்சாரம் தொடக்கம்: காங்கிரஸின் 139-வது நிறுவன தினத்தில், வரும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை அக்கட்சி தொடங்கியது. மகாராஷடிர மாநிலம் நாக்பூரில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா வதேரா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, “என்டிஏ மற்றும் இண்டியா கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ள போதிலும் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையில்தான் சண்டை நடைபெறுகிறது. பாஜக நமது நாட்டை அடிமை யுகத்திற்கு கொண்டுசெல்ல முயற்சிக்கிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியில் புதிதாக சேர்ந்த ஒருவர் உயர்மட்ட தலைவர்களை நோக்கி கேள்வி கேட்கும் சுதந்திரம் உள்ளது.

நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களையும் பாஜக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அனைத்து துணைவேந்தர்களும் ஒரே அமைப்பை சேர்ந்தவர்களாகஉள்ளனர். தகுதி அடிப்படையிலான நியமனங்கள் இல்லை மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x