Published : 13 Jan 2018 09:42 AM
Last Updated : 13 Jan 2018 09:42 AM
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் (இஸ்ரோ) அனைத்து திட்டங்களுக்கும் பாமர மக்களுக்கு உபயோகப்படும்படியாக இருத்தல் அவசியம் என இஸ்ரோ புதிய தலைவராக பொறுப்பேற்க உள்ள தமிழகத்தை சேர்ந்த கே.சிவன் தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் விண்வெளி மையத்தில் நேற்று பிஎஸ்எல்வி-40 ராக்கெட் மூலம் செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டு நிலைநிறுத்தப்பட்டன. இதைத் தொடர்ந்து, நிருபர்களுக்கு டாக்டர் கே.சிவன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
இஸ்ரோவில் நாம் முன்கூட்டியே திட்டங்கள் தீட்டி பணியாற்ற முடியாது. ஆனால், தற்போதைய நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் நமது திட்டங்களை திறமையாக செயல்படுத்த வேண்டும். குறிப்பாக இஸ்ரோவின் திட்டங்கள் பாமர மக்களுக்கு உபயோககரமாக இருத்தல் அவசியம். சமீபத்தில் ஒக்கி புயலால் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டது. இதுபோன்ற பிரச்சினைகளைக் கையாள ‘பிரம்மன்’ எனும் ஒரு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், நாம் இனி இயற்கை பேரிடர்களான புயல், சூறாவளி காற்று, சுனாமி, நிலநடுக்கம் போன்றவற்றை துல்லியமாக கணக்கிட முடியும். இதன் மூலம் மீனவர்கள், பொதுமக்கள் மிகவும் பயனடைவர். இதற்கு இஸ்ரோவின் அதிகாரிகள், ஊழியர்களின் முழு ஒத்துழைப்பை நான் எதிர்பார்க்கிறேன்.
இஸ்ரோவின் வருங்கால பணிகளை வெற்றிகரமாக நடத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.
இளைஞர்கள் எப்போதுமே தோல்வியை கண்டு துவண்டு விட கூடாது. தோல்வியை ஒரு பாடமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும். ஒருபோதும் முயற்சியை கைவிடக்கூடாது. பிஎஸ் எல்வி-40 செயற்கைக்கோள் மூலமாக இன்றைய இளம் விஞ்ஞானிகளுக்கு இதனை பயிற்சி தளமாக பயன்படுத்தும் திட்டம் உள்ளது. இது விரைவில் நிறைவேற்றப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT