Published : 29 Dec 2023 07:40 AM
Last Updated : 29 Dec 2023 07:40 AM
புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கின் குற்றப் பத்திரிகையில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டு உள்ளது.
கேரளாவை பூர்விகமாகக் கொண்டவர் சி.சி.தம்பி. தொழிலதிபரான அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கிறார். கடந்த 2005-2008-ம் ஆண்டில் ஹரியாணாவின் பரிதாபாத் அருகேயுள்ள அமீர்பூர் கிராமத்தில் 486 ஏக்கர் நிலத்தை சி.சி.தம்பி வாங்கினார். டெல்லியை சேர்ந்த எச்.எல். பாவா ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் அந்த இடத்தை அவர் வாங்கினார். கடந்த 2005-ம் ஆண்டில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா, ஹரியாணாவின் அமீர்பூர் கிராமத்தில் 40 ஏக்கர் விவசாய நிலத்தை எச்.எல். பாவா ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து வாங்கினார். கடந்த 2005-ம் ஆண்டில் அதே பகுதியில் அதே நிறுவனத்திடம் இருந்து பிரியங்கா காந்தியும் 5 ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கினார்.
எச்.எல். பாவா நிறுவனத்தின் மூலம் சி.சி. தம்பி நிலம் வாங்கியபோது சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றிருப்பதை அமலாக்கத் துறை கண்டுபிடித்தது. இதுதொடர்பாக தொழிலதிபர் சி.சி.தம்பி கடந்த 2010-ம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ராபர்ட் வதேராவும் பிரியங்கா காந்தியும் ஹரியாணாவின் அமீர்பூரில் தாங்கள் வாங்கிய நிலங்களை கடந்த 2010-ம் ஆண்டில் எச்.எல். பாவா நிறுவனத்திடம் விற்பனை செய்தனர். இந்த நிலங்களை வாங்கியதிலும் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்றதாக அமலாக்கத் துறை குற்றம்சாட்டி உள்ளது. இதுதொடர்பான வழக்கில் முன்னர் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் ராபர்ட் வதேராவின் பெயர் சேர்க்கப்பட்டது.
இந்த சூழலில் டெல்லி நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி அமலாக்கத் துறை புதிதாக குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் ராபர்ட் வதேராவின் மனைவியுமான பிரியங்கா காந்தியின் பெயரும் சேர்க்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “வெளிநாடுவாழ் தொழிலதிபரான சி.சி.தம்பி, ராபர்ட் வதேராவுக்கு மிகவும் நெருக்கமானவர். ஹரியாணாவில் வதேரா வாங்கிய நிலத்துக்கு முழுமையாக பணம் செலுத்தப்படவில்லை. அந்த பணத்தை சி.சி. தம்பி செலுத்தியதாகக் கூறப்படுகிறது. லண்டனில் வதேரா சொத்து வாங்கியதிலும் சி.சி. தம்பிக்கு தொடர்பு உள்ளது.
பிரியங்கா காந்தி ஹரியாணாவில் நிலம் வாங்கியதிலும் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் நடைபெற்று உள்ளது. எனவே குற்றப் பத்திரிகையில் பிரியங்காவின் பெயரும் சேர்க்கப்பட்டிருக்கிறது. ராபர்ட் வதேரா, பிரியங்காவின் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தன.
இந்த வழக்கு வரும் ஜனவரி 29-ம் தேதி டெல்லி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. வழக்கின் குற்றப்பத்திரிகையில் முதல் முறையாக பிரியங்கா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டிருப்பதால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT