Published : 28 Dec 2023 04:40 PM
Last Updated : 28 Dec 2023 04:40 PM
புதுடெல்லி: கத்தார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் இந்திய கடற்படை வீரர்களுக்கான மரண தண்டனையானது, சிறை தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படையின் முன்னாள் வீரர்கள் 8 பேர், கத்தாரில் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து, அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கில் மத்திய அரசு தலையிட்டது. கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மேல் முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. முன்னதாக, மேல் முறையீட்டு நீதிமன்றத்துக்கு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், கத்தாருக்கான இந்திய தூதர் உள்ளிட்டோர் சென்றனர்.
தூக்கு தண்டனையானது சிறை தண்டனையாகக் குறைக்கப்படுவதாக நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. இதனை இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "முழுமையான தீர்ப்பு நகலுக்காக காத்திருக்கிறோம். அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பதற்காக சட்ட நிபுணர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நெருக்கமான தொடர்பில் இருக்கிறோம்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் கத்தாருக்கான இந்திய தூதர் மற்றும் அதிகாரிகள் ஆஜராகினர். இந்த விவகாரத்தின் தொடக்கம் முதல் நாங்கள்(இந்திய அரசு) அவர்களுக்கு (குடும்பத்தினருக்கு) ஆதரவாக நிற்கிறோம். தொடர்ந்து தூதரக மற்றும் சட்ட ஆதரவை வாங்கள் வழங்குவோம். அதோடு, இந்த விவகாரத்தை கத்தார் அரசுக்கும் கொண்டு செல்வோம்.
சமீபத்தில் துபாயில் நடைபெற்ற சுற்றுச்சூழல் தொடர்பான COP28 மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடி, கத்தார் அரசர் ஷேக் தமிம் பின் ஹமாத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு தரப்பு உறவை மேம்படுத்துவது குறித்த இந்த பேச்சுவார்த்தை மிகவும் நல்ல முறையில் நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது, கத்தாரில் வாழும் இந்தியர்களின் நலன்களை பாதுகாப்பது குறித்தும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT