Published : 28 Dec 2023 12:09 PM
Last Updated : 28 Dec 2023 12:09 PM

வடஇந்தியாவில் தொடரும் பனி மூட்டம்: 134 விமானங்கள், 22 ரயில் சேவைகள் பாதிப்பு

புதுடெல்லி: தேசியத் தலைநகர் டெல்லியில் அடர்த்தியான பனி மூட்டம் நிலவுவதால் இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்தில் வியாழக்கிழமை 134 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் மூடுபனியால் எதிரே உள்ளவற்றை காணும் சாத்தியம் கிட்டத்தட்ட பூஜ்ஜிய நிலையை எட்டியது.

இதுகுறித்து, டெல்லி விமானநிலைய தகவல் பலகையில், டெல்லி விமானநிலைய பகுதிகளில் அடர்த்தியான பனிமூட்டம் நிலவுவதால் கிட்டத்தட்ட 134 விமான சேவைகள் (உள்ளூர் மற்றும் வெளிநாடு) வருகை, புறப்பாடு தாமதப்படுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மூடுபனியால் காணும் திறன் மிகவும் குறைவாக இருப்பதால் ரயில்களின் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. தேசிய தலைநகரில் குளிர்நிலை 6 டிகிரி செல்சியஸுக்கு குறைந்ததால் அங்கு குளிர் அலை தொடர்ந்து நீடித்து வருகிறது .

அதிகாலை 5.30 மணி நிலவரப்படி, உத்தரப் பிரதேசம், ஹரியாணா, சத்தீஸ்கர் மற்றும் டெல்லி, தென்மேற்கு ராஜஸ்தான் மற்றும் வடக்கு மத்தியப் பிரதேச பகுதிகளில் அடர்த்தி முதல் மிகவும் அடர்த்தி (0 - 25 மீட்டர்) பனி மூட்டம் நிலவியது. டெல்லியின் சப்தர்ஜங் பகுதியில் காட்சித் தெரியும் நிலை 50 மீட்டராகவும், பாலம் பகுதியில் 25 மீட்டராகவும் இருந்தது. இதனிடையே குளிர் அலை காரணமாக நகரில் வீடில்லாதவர்கள் மீண்டும் இரவு தங்குமிடங்களை நாடவேண்டிய நிலை உருவாகியுள்ளது.

உத்தரப் பிரதேசம், பிஹார், ராஜஸ்தான், உத்தராகண்ட் மற்றும் டெல்லி தேசிய தலைநகர் பகுதிகளில் குறைவான வெப்பநிலையே இருப்பதால் அங்கு தொடர்ந்து குளிர் அலை நிலவுகிறது. இதனிடையே வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை இரவு மற்றும் அதிகாலையில் டெல்லியில் அடர்த்தி முதல் மிகவும் அடர்த்தியான பனிமூட்டம் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. டெல்லியில் காலையில் அடர்த்தி முதல் மிக அடர்த்தியான பனி மூட்டம் நிலவும் எனவும், வெள்ளிக்கிழமை பனிமூட்டம் உருவாவதற்கான சூழ்நிலைகள் இருப்பதாக மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பள்ளி நேரங்கள் மாற்றம்: டெல்லி தலைநகரின் அருகில் உள்ள பகுதிகளில் குறைவான வெப்பநிலையே நிலவுவதால், உத்தரப் பிரதேச அரசு பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளிகளுக்கு வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்துள்ளது. காசியாபாத் அனைத்து பகுதிகளிலும் 1 முதல் 8 வரை உள்ள வகுப்புகளுக்கான நேரம் 10 மணி முதல் 3 மணி வரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதே போல் மதுராவிலும் பள்ளிகளுக்கான நேரம் காலை 10 மணி முதல் 3 மணிவரை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

அலிகார் முஸ்லிம் பல்கலை. கீழ் உள்ள பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை மாவட்ட நிர்வாகம் விடுமுறை அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x