Published : 28 Dec 2023 07:05 AM
Last Updated : 28 Dec 2023 07:05 AM
புதுடெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலர் கே.சி. வேணுகோபால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வரும் 2024 பொதுத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நடைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த நடை பயணத்துக்கு பாரத் ஜோடோ யாத்ரா அதாவது ஒற்றுமை நடைப் பயணம் என்று பெயரிடப்பட இருந்த நிலையில், இந்தியாவுக்கான நியாயம் கேட்கும் நடைப் பயணமாக பாரத் நியாய் யாத்ரா என்ற பெயரை காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு மனதாக முன்மொழிந்து அது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நியாயம் கேட்கும் யாத்திரையை 14 மாநிலங்கள் மற்றும் 85 மாவட்டங்களில் 6,200 கி.மீ. தொலைவுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது, காங்கிரஸுக்கும், இண்டியா கூட்டணிக்கும் புத்துணர்வு தரும் யாத்திரையாக அமையும்.
இந்த யாத்திரைக்கான பயணத்தை கிழக்கில் தொடங்கும் ராகுல் காந்தி மேற்கில் முடிக்க உள்ளார். அண்மையில் வன்முறைச் சம்பவங்களால் மிகவும் பாதிப்புக்குள்ளான மணிப்பூரில் தொடங்கும் இந்த யாத்திரை, நாகாலாந்து, அசாம், மேகாலயா, மேற்கு வங்கம், பிஹார், ஜார்க்கண்ட், ஒடிசா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய 14 மாநிலங்களின் வழியே நடைபெற்று இறுதியில் மும்பையுடன் முடிவடைய உள்ளது.
இந்த நியாயம் கேட்பு யாத்திரையின்போது ராகுல்காந்தி, பிறகட்சி தலைவர்கள், இளைஞர்கள், பெண்கள், விளிம்புநிலை மக்களுடன் உரையாடி அவர்களின் கருத்துகளை கேட்றிவார். காங்கிரஸ் கட்சித்தலைவர் மல்லிகார்ஜுன கார்கேஇந்த யாத்திரையை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். ஜனவரி 14-ம் தேதி தொடங்கும் இந்த யாத்திரை மார்ச் 20-ம் தேதி நிறைவுபெறும். இவ்வாறு வேணுகோபால் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் நிறுவன தினத்தை கொண்டாடும் வகையில் நாக்பூரில் 'ஹேன் தய்யார் ஹம்' பேரணிக்கு காங்கிரஸ் கட்சி இன்று ஏற்பாடு செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT