Published : 24 Jan 2018 12:07 PM
Last Updated : 24 Jan 2018 12:07 PM
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமி, தனது தந்தையுடன் சேர்ந்து, அங்குள்ள புகழ்பெற்ற தால் ஏரியை சுத்தம் செய்தார்.
காஷ்மீரின் ஸ்ரீநகரில் புகழ் பெற்ற தால் ஏரி அமைந்துள்ளது. சுற்றுலாப்பயணிகளைக் அதிகம் கவரும் அந்த ஏரி நாளுக்கு நாள் அசுத்தம் அடைந்து, குப்பைகள் சேர்ந்து வருகிறது. இந்த ஏரியை சுத்தம் செய்யும் நடவடிக்கையில் காஷ்மீர் மாநில அரசும் ஈடுபட்டுள்ளது. இதற்காக ஏரிகள் மற்றும் நீர்வழி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு சுத்தம் செய்யும் பணிகள் நடந்து வருகின்றன.
ஆனால், ஸ்ரீநகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி தனது தந்தையுடன் இணைந்து ஏரியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஸ்ரீநகரைச் சேர்ந்த 5 வயது சிறுமி ஜன்னத். இவர் அந்த நகரில் உள்ள லிண்டன் ஹால் பப்ளிக் ஸ்கூலில் எல்.கே.ஜி. படித்து வருகிறார். இந்நிலையில், அந்தநகரில் உள்ள புகழ் பெற்ற தால் ஏரி அசுத்தம் அடைந்து இருப்பதால், அதை சுத்தம் செய்யும் பணியில், தனது தந்தையுடன் சேர்ந்து ஈடுபட்டார்.
இது குறித்து சிறுமி ஜனாத் நிருபர்களிடம் கூறுகையில் "உள்ளூர் மக்கள், சுற்றுலாப் பயணிகள் அனைவரும் பல்வேறுவிதமான குப்பைகளையும், பிளாஸ்டிக் பாட்டில்களையும், பிளாஸ்டிக் பேப்பர்களையும் ஏரியில் வீசுகிறார்கள். இதனால், ஏரி அசுத்தம் அடைந்து அதன் அழகை இழந்து வருகிறது. ஆதலால், அனைவரும் குப்பைகளை குப்பைத் தொட்டியில் போட வேண்டும், ஏரியின் அழகை பாதுகாக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
மேலும், இது தொடர்பான வீடியோ ஒன்றையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டார்.
இந்த வீடியோவைப் பார்த்த பிரதமர் மோடி, 5வயது சிறுமி ஜன்னத்துக்கு ட்விட்டரில் பாராட்டுகள் தெரிவித்தார்.
மேலும், அந்த சிறுமியின் வீடியோவையும் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகர்ந்தார். இந்த வீடியோவைப் பதிவிட்டு அவர் குறிப்பிடுகையில், “ இந்த சின்னஞ் சிறுமி இந்த காலைப் பொழுதை மிகவும் அழகாகவும், சிறப்பாகவும் மாற்றிவிட்டார். தூய்மை இந்தியா திட்டத்துக்கு சிறுமியின் செயல் மிகச்சிறந்த ஊக்கமாக அமையும்” எனத் தெரிவித்தார்.
இந்த சிறுமியின் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT