Published : 17 Jan 2018 08:31 AM
Last Updated : 17 Jan 2018 08:31 AM
‘ஒ
ரு வாரம் என்பது அரசியலில் நீண்ட காலம்’ என்று கூறியிருக்கிறார் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் ஹரால்ட் வில்சன். அரசியலுக்குச் சொன்ன அந்த வார்த்தைகள் நீதித்துறைக்கும் பொருந்தும். உச்ச நீதிமன்றத்தின் நான்கு நீதிபதிகள் அளித்த பேட்டி இன்னும் சில காலத்துக்குப் பேசப்படும். நீங்கள் இப்படி பத்திரிகை நிருபர்களை அழைத்துப் பேட்டி தருகிறீர்களே, இனி உச்ச நீதிமன்றத்தில் எப்படி வழக்கமான பணிகள் நடைபெறும் என்று கேட்டதற்கு, ‘திங்கள்கிழமை முதல் வழக்கம்போல பணிக்குச் செல்வோம்’ என்று பதிலளித்தனர் நால்வரும்; அதைப் போலவே பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தைப் பொருத்தவரை தலைமை நீதிபதி என்பவர் ஏனைய நீதிபதிகளில் முதலானவரே தவிர, அவர்களுக்குச் சமமானவர்தான். சில நிர்வாகக் கடமைகளும் பொறுப்புகளும் அவருக்கு அதிகம். அதனால்தான் இப்போது பிரச்சினையே.
கடந்த இருபத்தைந்து ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் மற்ற அமைப்புகளிடமிருந்து ‘தனிமைப்படவில்லை’ என்றாலும் தன்னைச் சுற்றி வேலியமைத்துக் கொண்டுவிட்டது. மத்திய சட்ட அமைச்சரால் செய்ய முடிந்தது ஏதுமில்லை, குடியரசுத் தலைவர் பதவியில் புதிதாக அமர்ந்திருக்கும் ராம்நாத் கோவிந்துக்கு இதில் தலையிட்டு சமரசம் செய்யும் அளவுக்கு ‘கனம்’ கூடவில்லை. நாட்டின் தலைவர் என்ற பதவியில் இருப்பதால் இரு தரப்பையும் அழைத்துப் பேசவும், ஒரே அணியைச் சேர்ந்த நீங்களே எதிரெதிராக ஆடத் தொடங்கிவிட்டீர்களே என்று சுட்டிக்காட்டி உரிய ஆலோசனைகளை வழங்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
பணிமூப்பு உள்ளவர் இருக்க அவரை விட பணிமூப்பும் அனுபவமும் குறைவாக உள்ளவரைத் தலைமை நீதிபதியாக நியமிப்பது, நல்ல நீதிபதியாக இருப்பதற்காகப் பழிவாங்குவது, நட்பு பாராட்டுவதால் தக்க வகைகளில் சன்மானம் தருவது என்ற நடவடிக்கைகள் இதற்கும் முன்னால் - குறிப்பாக இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது - நடந்துள்ளன. அப்போதும் நீதிபதிகளுக்குள் கசமுசா இருக்கும். ஆனால் இப்போதிருப்பதைப் போல வெடித்ததில்லை. கடந்த சில பத்தாண்டுகளாக உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றங்களுக்கும் நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டியவர்களை, உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதிகளைக் கொண்ட கொலிஜீயமே தேர்ந்தெடுக்கிறது, நியமிக்கிறது. இந்த விவரங்கள் யாவும் மிகவும் ரகசியமாகவே காப்பாற்றப்படுகின்றன.
எதுவுமே கூட்ட நடவடிக்கைப் பதிவேடுகளில் எழுத்துப் பூர்வமாக பதிவு செய்யப்படுவதே இல்லை. . மிக மூத்த நீதிபதிகள் இந்தத் தேர்வுக் குழுவில் இடம்பெற்ற பிறகு மவுனத்தையும் ரகசியத்தையும் காப்பவர்களாகிவிடுகின்றனர். இந்த மரபுதான் முதலில் நீதிபதி செலமேஸ்வராலும் பிறகு அவருக்கடுத்த மூன்று பணி மூப்புள்ள நீதிபதிகளாலும் உடைக்கப்பட்டிருக்கிறது.
உச்ச நீதிமன்றத்துக்கும் உயர் நீதிமன்றத்துக்கும் நீதிபதிகளை நியமிக்க, ‘தேசிய நீதித்துறை ஆணையம்’ என்ற அமைப்பை உருவாக்க அரசியல் ரீதியாக முற்பட்டபோது நீதித்துறை அதைக் கடுமையாக எதிர்த்ததுடன் ‘கொலீஜியம் முறைதான் தொடரும்’ என்று தீர்ப்பளித்தது. இதை நான் உட்பட எல்லா பத்திரிகையாளர்களும் முழுதாக ஆதரித்தது பழங்கதை.
நீதித்துறையும் எங்களை ஏமாற்றிவிடவில்லை. அரசியல் சட்ட முறைமை அல்லது தனிநபர் சுதந்திரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளில் மக்களின் நலனுக்கு ஆதரவாகவே நீதித்துறை தீர்ப்பு வழங்கியது. அதே நேரம் தன்னுடைய அமைப்பின் கதவையும் இறுக்க மூடிக்கொண்டது.
கடந்த சில ஆண்டுகளாகவே நீதித்துறை தன்னுடைய அதிகாரத்திலும் நிர்வாகத்திலும் யாரும் தலையிட முடியாது என்று தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. கொலீஜியத்தில் இடம் பெறும் நீதிபதிகளின் பெயர்களிலிருந்தே அவர்களுடைய பணிமூப்பையும் அந்தஸ்தையும் ஊகிக்க முடிகிறது. ஆனால் அதன் கூட்டங்களில் என்ன விவாதிக்கப்பட்டது, நீதிபதிகளின் பெயர்கள் எப்படி தேர்வு செய்யப்படுகின்றன என்ற விவரங்களைத் தாருங்கள் என்று கேட்டபோது மறுக்கப்பட்டது. செலமேஸ்வர் திடீரென தலைமை நீதிபதிக்கு எதிராகக் கேள்விகளைக் கேட்டுவிடவில்லை. கூட்ட நிகழ்வுகளைப் பதிவு செய்ய வேண்டும், அதை வெளியிட வேண்டும் என்று அவர் கேட்டார். அது ஏற்கப்படாத பட்சத்தில் கூட்டங்களில் பங்கேற்காமல் தவிர்த்தார். சில முக்கியமான வழக்குகளை விசாரிக்க நீதிபதிகளைத் தேர்வு செய்தது தொடர்பாகத்தான் இப்போது எதிர்ப்பு வெடித்துள்ளது.
அரசின் அடக்குமுறைக்கு எதிராக தனியொரு மனிதன் கிளர்ந்தெழுந்த பல உதாரணங்கள் நிறைய இருக்கின்றன. இந்திரா காந்தியின் அதிகாரமும் செல்வாக்கும் உச்சத்தில் இருந்த நிலையில் அலாகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன் லால் சின்ஹா அவருடைய தேர்தல் வெற்றி செல்லாது என்று தீர்ப்பளித்து வரலாற்றில் இடம் பிடித்தார்.
ராஜீவ் காந்தியும் அப்படியொரு தனி நபரின் புரட்சியால் ஆட்சியை இழந்தார். அந்த ஒருவர் விசுவநாத் பிரதாப் சிங். 2 ஜி அலைக்கற்றை ஏலம் தொடர்பான தணிக்கை அறிக்கையை தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் வெளியிடாமல் இருந்திருந்தால் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2014 மக்களவை பொதுத் தேர்தலில் படுதோல்வி அடைந்திருக்குமா? இந்த விவகாரத்தில் தீர்ப்பளித்த நீதிபதி ஜி.எஸ். சிங்விக்கும் பாராட்டுகள் கிடைக்க வேண்டும். நீதிபதி செலமேஸ்வரோ, இதர மூன்று நீதிபதிகளோ மோடி அரசின் இயக்கத்தைத் தடுத்து நிறுத்திவிடும் ஆற்றல் பெற்றவர்கள் அல்ல; தங்களுடைய அமைப்புக்கு எதிராகத்தான் போர்க் கொடி உயர்த்தினர்.
மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி தருவது தொடர்பான வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் நீதித்துறைதான் சம்பந்தப்பட்டிருக்கிறது; இவற்றின் முடிவைப் பொருத்துத்தான் நீதித்துறையின் மாண்பும் மரியாதையும் மீட்சி பெறும். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா இனி எப்படிச் செயல்படப் போகிறார் என்று பார்க்க வேண்டும்.
தமிழில்: ஜூரி
சேகர் குப்தா, ‘தி பிரின்ட்’ தலைவர்,
முதன்மை ஆசிரியர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT