Published : 27 Dec 2023 11:27 AM
Last Updated : 27 Dec 2023 11:27 AM
புதுடெல்லி: வட இந்தியாவில் நிலவும் அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக டெல்லியில், 110 விமானங்கள், 25 ரயில்கள் சேவை பாதிக்கப்பட்டுள்ளன. டெல்லியில் கடும் குளிர்நிலை தொடர்வதால் தேசிய தலைநகருக்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சில நாட்களுக்கு பனி மூட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது.
பனிமூட்டம் காரணமாக உத்தரப் பிரதேசத்தில் பல விபத்துக்கள் பதிவாகியுள்ளன. ஆக்ரா - லக்னோ விரைவு சாலையில் பல்வேறு வாகனங்கள் மோதிக்கொண்டதில் 12 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். பரேலியில், பரேலி - சுல்தான்பூர் சாலையில் வேகமாக வந்த ட்ரக் ஒரு வீட்டின் மீது மோதியது.
இதனிடையே, பஞ்சாப், ஹரியாணா, டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தில் பனிமூட்டம் அடர்த்தியானது முதல் மிக அடர்த்தியானதாக நிலவும் என்று மத்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியைத் தவிர வட இந்தியா முழுவதும் அதிகாலை முதலே பனி மூட்டம் நிலவியதால் சாலையில் எதிரிலிருப்பவர்களை பார்ப்பது சிரமமாக இருந்தது. பாட்டியாலா, லக்னோ மற்றும் பிரயக்ராஜ் பகுதிகளில் காட்சித் திறன் நிலை (visibility) 25 மீட்டர் தூரத்துக்கும் குறைவாக இருந்தது. அமிர்தசரசில் இது பூஜ்யமாக பதிவாகி இருந்தது.
டெல்லி இந்திராகாந்தி சர்வதேச விமானநிலையத்துக்கு அருகில் இருக்கும் பாலம் நிலையம் காட்சித் திறன் நிலை 125 மீட்டர் தூரமாக பதிவு செய்துள்ளது. சப்தர்ஜங்க் ஆய்வகத்தில் இது 50 மீட்டராக பதிவாகியுள்ளது. என்றபோதிலும் தேசிய தலைநகரில் பல்வேறு பகுதிகளில் சாலைகளில் காட்சித் தெரியும் நிலை மிகவும் குறைவாக இருப்பதாக பயணிகள் தெரிவித்தனர்.
டெல்லியில் பல வாரங்களாக நல்ல நிலையில் இருந்து வந்த காற்றின் தரம் குறைந்துள்ளது. சராசரி காற்றின் தரம் 381 என்ற நிலையில், தற்போது மிகவும் மோசம் என்ற நிலையை அடைந்துள்ளது. குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 24 செல்சியஸ் டிகிரியாக உள்ளது.
மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின் படி, காற்றின் தரக்குறியீடு ஆனந்த் விஹார் பகுதியில் 441, மத்திய டெல்லியிலுள்ள லோதி சாலையில் 327, இந்திராகாந்தி சர்வதேச விமானநிலைய பகுதியில் 368, காசியாபாத் மற்றும் நொய்டாவில் 336 மற்றும் 363 ஆக பதிவாகியுள்ளது.
வானிலை ஆய்வுநிலையத்தின் கூற்றுப்படி, பனியின் ஊடே பார்க்கும் திறன் நிலை0- 50 மீட்டர் தூரமாக இருந்தால் அது அடர்த்தியான மூடு பனி நிலை, 51 முதல் 200 மீட்டர் வரை இருந்தால் அடர்த்தி, 201 முதல் 500 மீட்டர் வரை இருந்தால் மிதமாகவும், 500 முதல் 1,000 மீட்டர் வரை இருந்தால் மோசமில்லை என்றும் அர்த்தம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment