Published : 27 Dec 2023 07:27 AM
Last Updated : 27 Dec 2023 07:27 AM
புதுடெல்லி: மது மற்றும் போதை பொருட்கள் பழக்கத்துக்கு எதிராக மிகப்பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
தேசிய வீர பாலகர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி டெல்லியில் உள்ள பாரத்மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது: சீக்கியர்களின் 10-வது குரு கோவிந்த் சிங்கின் இளையமகன்கள் ஜோராவர் சிங், பாபாஃபதே சிங்கின் தியாகத்தை நினைவுகூரும் வகையில் வீர பாலகர் தினம் கொண்டாடப்படுகிறது.
நமது முன்னோர்கள் இந்திய மண்ணை காப்பாற்ற தங்களது இன்னுயிரை தியாகம் செய்தனர். குரு கோவிந்த் சிங், பிர்சா முண்டா போன்ற தலைவர்களின் தியாகம் ஒட்டுமொத்த நாட்டுக்கும் உத்வேகம் அளிக்கிறது. நமது பாரம்பரியத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் இந்தியா குறித்த உலகின் சிந்தனைகள் மாறும். தற்போது அடிமைத்தன மனநிலையில் இருந்து இந்தியா மீண்டு வருகிறது.இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இன்றைய சூழலில் பல்வேறு சர்வதேச சவால்களுக்கு இந்தியா தீர்வு அளித்து வருகிறது. பொருளாதாரம், அறிவியல், ஆராய்ச்சி, விளையாட்டு என அனைத்து துறைகளில் இந்திய புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இது இந்தியாவின் காலம். அடுத்த 25 ஆண்டுகள் நாம் கடினமாக உழைக்க வேண்டும். ஒரு நொடியைக்கூட வீணாக்கக்கூடாது. இந்திய மண்ணின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்ற வேண்டும். ஒன்றுபட்டு உழைத்து இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற வேண்டும்.
சுதந்திர போராட்ட காலத்தில் இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. ஆனாலும் அன்றைய இந்திய இளைஞர்கள் நாட்டின் விடுதலைக்காக போராடினர். அவர்களின் சக்தியால் இந்தியா சுதந்திரம் பெற்றது.
இப்போது உலகில் இளைஞர்கள் அதிகம் வாழும் நாடு என்றபெருமையை நாம் பெற்றுள்ளோம். இன்றைய இந்திய இளைஞர்கள் கற்பனைக்கு எட்டாத உயரத்துக்கு இந்தியாவை கொண்டு செல்ல வேண்டும் என்று அழைப்புவிடுக்கிறேன். நசிகேதன், அபிமன்பு, துருவன், ஏகலைவன் வரலாறை படிக்க வேண்டும். மிக இளம் வயதில் சந்திரகுப்தா மவுரியா மிகப்பெரிய ராஜ்ஜியத்தை வழிநடத்தினார். இந்திய இளைஞர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர்கள் எதிர்கால இந்தியாவை வெற்றிப் பாதையில் வழிநடத்துவார்கள்.
புதிய கல்விக் கொள்கை 21-ம்நூற்றாண்டில் புதிய இந்தியாவைஉருவாக்கும். நாடு முழுவதும் 10,000 அடல் சிந்தனை ஆய்வகங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் மாணவ, மாணவியர் பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட ஊக்கவிக்கப்படுகின்றனர். அனைத்து விளையாட்டுகளிலும் இந்திய இளைஞர்கள் சாதனை படைத்து வருகின்றனர். அவர்களின் சாதனைகளால் சர்வதேச அரங்கில் இந்திய தேசிய கொடி மிக உயரத்தில் பறக்கிறது.
மது பழக்கம், போதை பொருட்கள் பழக்கம் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இந்த தீமையில் இருந்து இந்திய இளைஞர்களை காப்பாற்ற வேண்டும். அதற்காக மது பழக்கம், போதை பொருட்கள் பழக்கத்துக்கு எதிராக மிகப்பெரிய இயக்கத்தை தொடங்க வேண்டும். அனைத்து மதத் தலைவர்கள், சமூக அமைப்புகள் இந்த இயக்கத்தை முன்னின்று நடத்த வேண்டும். வலுவான இளைய சமூகத்தை உருவாக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT