Published : 26 Dec 2023 05:05 PM
Last Updated : 26 Dec 2023 05:05 PM

“இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்து காங். சரியான நேரத்தில் முடிவு” - ஜெய்ராம் ரமேஷ்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்

புதுடெல்லி: “இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இண்டியா கூட்டணி சார்பில் விவாதிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் நாங்கள் மிகத் தீவிரமாக எடுத்து விவாதித்து வருகிறோம்” என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகளின் இண்டியா கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த விவகாரத்தில் சஸ்பென்ஸ் தொடரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தொகுதிப் பங்கீடு விவகாரம் தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் பல்வேறு வகையான சூழ்நிலைகள் மற்றும் சவால்கள் உள்ளன. அங்குள்ள சூழலைக் கவனத்தில் கொண்டு, தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க வேண்டும். என்ன செய்ய வேண்டுமோ அதை நாங்கள் தக்க சமயத்தில் செய்வோம்.

காங்கிரஸ் கட்சி டிசம்பர் 28-ஆம் தேதி நாக்பூரில் ஒரு மாபெரும் பேரணியை நடத்தவிருக்கிறது. இண்டியா கூட்டணி சார்பில் விவாதிக்கப்பட்ட அனைத்து விஷயங்களையும் நாங்கள் மிகவும் தீவிரமாக எடுத்து விவாதித்து வருகிறோம். அண்மையில் நடைபெற்ற சந்திப்பு 3 மணி நேரம் நீடித்தது. கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க நாங்கள் தயாராக உள்ளோம் என்றும், இண்டியா கூட்டணியின் கட்சிகள் ஒற்றுமையாகவும் வலுவாகவும் இருக்கின்றன என்றும் தெளிவாகத் தெரிவித்துவிட்டனர். காங்கிரஸ் வெற்றிபெற தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும்” என்றார்.

இண்டியா கூட்டணியில் காங்கிரஸ் `பெரிய அண்ணன்' (big brother) மனப்பான்மையில் இருக்க விரும்புகிறதா என்ற கேள்விக்கு, பதிலளித்த ரமேஷ், “எங்கள் கூட்டணியில் நாங்கள் (காங்கிரஸ்) அப்படிக் கிடையாது. கூட்டணியில் உள்ள அனைத்து சக கட்சியினரைப் போலவே நாங்களும் இருக்கிறோம். அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாத்தல், மக்களை வேலையில்லா திண்டாட்டம் மற்றும் பணவீக்கத்திலிருந்து விடுவிப்பது என்ற இலக்கை அடைய நாம் அனைவரும் உழைத்து வருகிறோம். இதுவே எங்கள் இலக்கு. பொருளாதார சமத்துவமின்மை, சர்வாதிகாரத்துக்கு எதிராக ஒன்றுபட்டுப் போராட விரும்புகிறோம்” என்றார்.

உ/பி காங்கிரஸின் ஏஐசிசி (AICC) பொறுப்பாளர் பதவியிலிருந்து பிரியங்கா காந்தி விடுவிக்கப்பட்டது தொடர்பாகச் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்குப் பதிலளித்த அவர், “தனிப்பட்ட ஒருவரைப் பற்றி என்னால் எதுவும் கூற முடியாது. அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக உள்ளார். அவர் சத்தீஸ்கர், தெலங்கானா, ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் தேர்தல் பிரச்சாரங்களில், எங்களின் கட்சி சார்பில் முக்கிய பங்காற்றியுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x