Published : 26 Dec 2023 06:41 AM
Last Updated : 26 Dec 2023 06:41 AM
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலில் வாக்குகளை பெறுவதற்கான உத்தியாக உத்தரகாண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டத்தை (யுனிஃபார்ம் சிவில் கோட்-யுசிசி) அமல்படுத்துவதில் பாஜக தீவிரம் காட்டி வருகிறது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை ரத்து செய்வது, பொதுசிவில் சட்டம் போன்ற வாக்குறுதிகள் பாஜகவின் தேர்தல் அறிக்கைகளில் பலதசாப்தங்களாக இடம்பெற்றன. இந்த நிலையில், முதல்இரண்டு வாக்குறுதிகளை ஏற்கெனவே நிறைவேற்றப்பட்டுவிட்ட நிலையில், எஞ்சியுள்ள பொது சிவில் சட்ட வாக்குறுதியையும் நிறைவேற்ற பாஜக தற்போது தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் வரும் மக்களவைத் தேர்தலில் பெருவாரியான வாக்குகளை கவர அந்த கட்சி திட்டம் தீட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜகவின் முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பொது சிவில் சட்டம் என்பது அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பட்டியலில் உள்ளது. எனவே, இந்த சட்டத்தை ஒரே உத்தரவின் மூலம் நாடு முழுவதும் அமல்படுத்த முடியாது என்பதில் மத்திய அரசு தெளிவாக உள்ளது. ஆனால், மாநிலங்கள் தங்களுக்கென சொந்தமாக மசோதாவை நிறைவேற்றி அதனை அமல்படுத்திக் கொள்ள முடியும்.
10 மாநிலங்களில்... இந்த நிலையில், பாஜக ஆளும்10 மாநிலங்களில் பொது சிவில்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் கட்சி உறுதியாக உள்ளது.
அதன் முன்னோட்டமாக, வரும் ஜனவரியில் பொது சிவில் சட்டத்தை உத்தராகண்டில் அமல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதில் கிடைக்கும் மதிப்பாய்வுகளைக் கொண்டு பின்னர் அந்த சட்டத்தை உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஹரியாணா, மகாராஷ்டிரா, அசாம், திரிபுரா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்த பாஜக முடிவு செய்துள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து குடிமக்களுக்கும் பாகுபாடற்ற ஒரே மாதிரியான சட்டம் இருக்க வேண்டும். இதில், மதத்தை ஒரு அளவுகோலாக வைத்து பிரிவினையை ஏற்படுத்தக்கூடாது என்பதை களத்திற்கே சென்று மக்களிடம் விளக்கி அவர்களின் ஆதரவையும், நம்பிக்கையையும் பெற பாஜக திட்டமிட்டுள்ளது. ஏனெனில், பொது சிவில் சட்டத்துக்கு எதிரானவர்கள் எங்களை எதிரியாக சித்தரித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்துவர். அதற்காகவே இந்த நடவடிக்கை. இவ்வாறு அந்த நிர்வாகி தெரிவித்தார்.
2.3 லட்சம் பேரிடம் கருத்து கேட்பு: பொது சிவில் சட்டம் குறித்து மக்களின் கருத்துகளை கேட்டறியும் வகையில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் குழு ஒன்றை உத்தராகண்ட் அரசு அமைத்தது. அந்த குழு கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 2.3 லட்சம் பேரிடம் பொதுசிவில் சட்டம் குறித்த அவர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்டறிந்துள்ளது.
இந்த குழுவின் இறுதி அறிக்கை கிடைத்தவுடன் தாமதமில்லாமல் உத்தராகண்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஏற்கெனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT