Published : 25 Dec 2023 07:36 AM
Last Updated : 25 Dec 2023 07:36 AM

உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணிக்கான ஊதியம் போதாது: ‘எலி வளை' சுரங்க தொழிலாளர்கள் அதிருப்தி

புதுடெல்லி: உத்தராகண்ட் சுரங்க மீட்புப் பணிக்காக வழங்கப்பட்ட ஊதியம் போதாது என்று ‘எலி வளை' சுரங்க தொழிலாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

உத்தராகண்டில் சில்க்யாரா- பர்கோட் இடையே அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையில் கடந்த நவம்பர் 12-ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது. இதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்க மண் சரிவின் பக்கவாட்டில் அமெரிக்க தயாரிப்பு இயந்திரம் மூலம் துளையிடப்பட்டது. ஆனால், அந்த இயந்திரம் உடைந்தது. மீதமுள்ள 13 மீட்டர் தொலைவை துளையிட டெல்லியில் இருந்து 12 ‘எலி வளை' தொழிலாளர்கள் வரவழைக்கப்பட்டனர். உயிரை பணயம் வைத்து அவர்கள் சுரங்கப்பாதையை துளையிட்டு குழாய்களை பொருத்தினர். அவர்கள் அமைத்த குழாய் பாதை வழியாக கடந்த நவம்பர் 28-ம் தேதி 41 தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.

உத்தராகண்ட் அரசு சார்பில் 12 ‘எலி வளை' தொழிலாளர்களுக்கும் தலா ரூ.50,000-க்கான காசோலை வழங்கப்பட்டது. இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: ஒட்டுமொத்த இந்தியர்களும் சுரங்க தொழிலாளர்களை மீட்க பிரார்த்தனை செய்தனர். மத்திய, மாநில அரசு நிறுவனங்கள் பல நாட்கள் போராடி பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை. இக்கட்டான சூழலில் உயிரை பணயம் வைத்து நாங்கள் சுரங்கத்தை தோண்டி 41 தொழிலாளர்களை மீட்க வழி செய்தோம். மீட்புப் பணியில் ஈடுபட்ட 90 பேரின் பட்டியலை உத்தராகண்ட் அரசு வெளியிட்டது.

அதில் எங்களது பெயர்கள் இல்லை. எங்களுக்கு ஊதியமாகரூ.50,000-க்கான காசோலை வழங்கப்பட்டது. உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி முன்னிலையிலேயே எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினோம். அப்போது கூடுதல் ஊதியம் வழங்கப்படும் என்று அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதுவரை கூடுதல் ஊதியத்துக்கான எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. ரூ.50,000-க்கான காசோலையை நாங்கள் இதுவரை பணமாக்கவில்லை. ஒருவேளை கூடுதல் ஊதியம் வழங்கப்படாவிட்டால் காசோ லையை அரசிடம் திருப்பி அளிப்போம்.

நாங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள். எங்களது நிலையை கருத்தில் கொண்டு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்கலாம் அல்லது குடியிருப்பதற்கு ஒரு வீட்டை கட்டித் தரலாம். எங்களது கோரிக்கையை உத்தராகண்ட் அரசிடம் முறைப்படி தெரிவித்துள்ளோம். இவ்வாறு ‘எலி வளை' சுரங்க தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x