Published : 25 Dec 2023 07:47 AM
Last Updated : 25 Dec 2023 07:47 AM
அமராவதி: தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்ச ந்திரபாபு நாயுடுவை அமராவதியில் உள்ள அவரது வீட்டில், அரசியல் ஆலோசகரான பிரசாந்த் கிஷோர் சந்தித்து பேசினார்.
பிகே என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர் இந்திய அரசியல் வல்லுனராவார். இவர் பாஜக, காங்கிரஸ், திமுக, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளுக்கு ஆலோசகராக இருந்து தேர்தல் வியூகத்தை வகுத்து ஆட்சியில் அமர வைத்துள்ளார். கடந்த ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் இவர் ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகத்தை வகுத்தார். இதில் ஜெகன் மாபெரும் வெற்றி பெற்று 151 இடங்களை கைப்பற்றி முதல்வரானார்.
இந்நிலையில், இம்முறையும் பிரசாந்த் கிஷோர்தான் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தேர்தல் வியூகத்தை வகுத்து கொடுப்பார் என பலர் எதிர்பார்த்தனர். ஆனால், யாருமே எதிர்பாராத விதத்தில், விஜயவாடா விமான நிலையத்திலிருந்து சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷும், அவருடன் பிரசாந்த் கிஷோரும் நேற்றுமுன்தினம் ஒன்றாக வெளியே வந்ததை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
அதன் பின்னர் இருவரும் ஒரே காரில் சந்திரபாபு நாயுடுவின் வீட்டிற்கு சென்றனர். அங்கு சந்திரபாபு நாயுடு, அவரது அரசியல் ஆலோசகர் ராபின் சர்மாவுடன், பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தினார்.
தற்போதைய ஆந்திர அரசியல் நிலவரம், ஜெகன் அரசு மீதுள்ள மக்களின் அதிருப்தி, அரசியல் திட்டங்கள், அவற்றின் குறைபாடுகள் உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து இவர்கள் விவாதித்ததாக தெரிகிறது. மேலும் இம்முறை தெலுங்கு தேசம் - ஜனசேனா கட்சிகளின் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இவர்களின் சந்திப்பு தற்போது ஆந்திர அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த முறை ஜெகன்மோகன் ரெட்டிக்கு வெற்றி பாதை அமைத்து கொடுத்த பிரசாந்த் கிஷோர், இம்முறை திடீரென தேர்தலுக்கு முன் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தது ஏன்? என அனைவரும் விவாதித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT