Published : 02 Jan 2018 01:25 PM
Last Updated : 02 Jan 2018 01:25 PM
திருப்பதி ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசி, துவாதசி ஆகிய இரு நாட்களில் மட்டும் 1.75 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த 29, 30 ஆகிய தேதிகளில் வைகுண்ட ஏகாதசி, துவாதசி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சொர்க்க வாசல் வழியாக வந்து, திரளான பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆங்காங்கே சில இன்னல்கள் ஏற்பட்டிருந்தாலும், கடந்த 2 நாட்களில் மட்டும் 1,75,258 பக்தர்கள் சுவாமியைத் தரிசித்துள்ளனர். இதுவரை வைகுண்ட ஏகாதசி, துவாதசி நாட்களில் 1,01,246 பக்தர்கள் சுவாமியை தரிசித்ததே சாதனையாக இருந்தது. இந்த சாதனை இம்முறை முறியடிக்கப்பட்டுள்ளது.
24-ம் தேதி ரதசப்தமி திருவிழா
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 24-ம் தேதி 'மினி பிரம்மோற்ஸவம்' என்றழைக்கப்படும் ரதசப்தமி திருவிழா சிறப்பாக நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அன்றைய தினம், உற்ஸவரான மலையப்ப சுவாமி அதிகாலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.
ஆர்ஜிதசேவைகளுக்குஅனுமதி
வைகுண்ட ஏகாதசி, துவாதசியை முன்னிட்டு கடந்த டிசம்பர் மாதம் 28-ம் தேதி முதல் ஜனவரி மாதம் 1-ம் தேதி வரை திருமலை திருப்பதி தேவஸ்தானம் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்வதாகவும் சிபாரிசு கடிதங்களை ஏற்க மாட்டோம் எனவும் அறிவித்தது. இந்நிலையில், இன்று முதல், வழக்கம்போல் அனைத்து ஆர்ஜித சேவைகளும் தொடங்கியது. கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்ற பக்தர்கள் இன்று காலை முதல் ஆர்ஜித சேவைகளில் பங்கேற்று வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT