Published : 24 Dec 2023 07:40 PM
Last Updated : 24 Dec 2023 07:40 PM

கோவிட் 19 புதிய மாறுபாடான ஜேஎன்.1 பாதிப்புக்கு கூடுதல் தடுப்பூசி தேவையில்லை: மத்திய அரசு 

புதுடெல்லி: கோவிட் வைரஸின் புதிய மாறுபாடான ஜேஎன்.1 தொற்றால் பாதிப்புகள் எண்ணிக்கை அதிகரித்து வர மத்திய சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் படி மாநில அரசுகள் தயாராக இருந்து வரும் நிலையில், இந்தியாவில் கூடுதல் பூஸ்டர் தடுப்பூசிப் போட அறிவுறுத்தப்படவில்லை என்று மூத்த சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியா SARS-CoV-2 ஜெனோமிக்ஸ் கூட்டமைப்பின் (INSACOG) தலைவர் என்.கே. அரோரா தி இந்துவிடம் கூறுகையில், "கோவிட் மாறுபாடு அதிகரித்ததும், ஜேஎன்.1 மாறுபாடு கண்டறியப்பட்டுள்ள நிலையில் கோவிட் பரவலைக் கட்டுப்படுத்த கூடுதலாக நான்காவது தடுப்பூசி அவசியமில்லை. 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் அதே வயதிலுள்ள ஆபத்தான நோயுள்ள இதுவரை ஒரு தடுப்பூசி கூட போடாதவர்கள் மூன்றாவது தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம். சாதாரண மக்களுக்கு நான்காவது தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் முன்னெச்சரிக்கைகளை அறிவிப்போம், மக்கள் பீதியடையத் தேவையில்லை. புதிய திரிபுகள், துணை மாறுபாடுகள் உலகம் முழுவதும் பதிவாகி வருகின்றன.

அதிர்ஷ்டவசமாக இந்த ஒமிக்ரான் மாறுபாடு தீவிர நோய்களுடன் தொடர்புடையாதாகவோ, மருத்துவமனையில் சேரும் அளவுக்கு தீவிரமாகவோ இல்லை. காய்ச்சல், மூக்கில் இருந்து சளி ஒழுகுதல், இருமல், சிலநேரங்களில் வயிற்றுப்போக்கு, உடல் வலி ஆகிய அறிகுறிகளைக் கொண்ட ஜேஎன்.1 துணைமாறுபாடு ஒரு வாரத்தில் குணமாகி விடும். மத்திய அரசு ஏற்கனவே சோதனைகளை அதிகப்படுத்தவும், தொற்று அறியப்பட்டால் கூடுதல் ஆய்வுக்கு தெரிவிக்கவும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளன". இவ்வாறு தெரிவித்தார்.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 656 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,742 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கேரளாவில் ஒருவர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,33,333 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறைத் தெரிவித்துள்ளது.

இதனிடையே பூனாவை அடிப்படையாக கொண்ட சீரம் இன்ஸ்ட்டியூட் ஆப் இந்தியா நிறுவனம் XBB1 தடுப்பூசிக்கான அனுமதியை பெற முயற்சித்து வருகிறது. இது இந்தியாவில் ஜேஎன்1 பாதிப்புக்கு பொறுத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அறிக்கை ஒன்றில் சீரம் நிறுவனம் கூறுகையில், "குளிர்காலம் நெருங்குவதால் ஜேஎன்1 பாதிப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மக்கள் பீதியடையத் தேவையில்லை. வயது மூத்தவர்கள் முகக்கவசம் அணிவது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.

எங்களுடைய தடுப்பூசி முயற்சிகளை பொறுத்தவரை நாங்கள் தற்போது XBB1 மாறுபாடு தடுப்பூசியை வழங்கி வருகிறோம். இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஜேஎன்1 மாறுபாட்டினை ஒத்தது. வரும் மாதங்களில் இந்தியாவில் இந்த தடுப்பூசிக்கான உரிமத்தை பெற முயன்று வருகிறோம். பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் இந்த ஊசிக்கான உரிமை பெறுவதற்கான அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பித்துள்ளோம்" என தெரிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷில்டு மற்றும் ஸ்பூட்னிக் - வி தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x